தூத்துக்குடி மாவட்டம், தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோயில் பிள்ளைநகர், அருகே உள்ள பண்டுகரை பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு திருமணமாகி ஆறு மகன்கள் உள்ளனர், அதில் ஐந்தாவது மகன் அருள்ராஜ், இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனக்கு நடைபெற்ற விபத்தில் கண் பார்வையை இழந்துள்ளார். இதன் காரணமாக திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்தே வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சனிக்கிழமை 26 ஆம் தேதி நள்ளிரவு அருள்ராஜ் வீட்டு அருகே அமர்ந்து கொண்டு, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் ரீதன், முனீஸ்வரன், வில்வராஜ், மற்றும் காதர் மீரான் பகுதியைச் சேர்ந்த சங்கர் ஆகியோர் கஞ்சா புகைத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் அருள்ராஜ் வீட்டு கதவை தட்டியும் இடையூறு செய்துள்ளனர், இதனால் ஆத்திரம் அடைந்த அருள்ராஜ் வீட்டை விட்டு வெளியில் வந்து அவர்களை சத்தமிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆத்திரத்தில் கஞ்சா கும்பலில் இருந்த சதீஷ் ரீதன், முனீஸ்வரன், வில்பராஜ், மற்றும் சங்கர் ஆகியோர் அன்று இரவே வீட்டில் இருந்து அருள் ராஜாவை யாருக்கும் தெரியாமல் குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு, பண்டுகரை பகுதிக்கு எடுத்துச் சென்ற கும்பல் அப்பகுதியில் வைத்து அருள் ராஜை சரமாரியாக அடித்து கொலை செய்ததுள்ளது, மேலும் போலீசாரிடம் மாட்டிக் கொள்ள கூடாது என எண்ணி அவரது உடலை அங்கே குழி தோண்டி புதைத்துள்ளனர்.
இந்நிலையில் அருள் ராஜை காணவில்லை என அவரது உறவினர்கள் மூன்று நாட்களாக தேடி வந்த நிலையில் நேற்று மாலை பண்டு கரைப் பகுதியில் மனித கை தெரிகிறது என அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெர்மல் நகர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். விசாரணையின் அடிப்படையில் இன்று காலை அருள்ராஜ் உடலை கஞ்சா கும்பல் கொலை செய்து புதைத்த இடத்திலிருந்து வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் எடுத்து பின்னர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பார்வையற்ற நபரான அருள்ராஜை கொலை செய்து குழி தோண்டி புதைத்து விட்டு தப்பி ஓடிய கஞ்சா கும்பலை, தெர்மல் நகர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் கஞ்சா போதை கும்பல் கண்பார்வையற்ற நபரை அடித்து கொலை செய்து குழி தோண்டி புதைத்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.