பெங்களூருவில் ஒரு பள்ளி ஆசிரியை, தனது மாணவியின் தந்தையுடன் ஏற்பட்ட உறவைப் பயன்படுத்தி அவரை மிரட்டி பணம் பறித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட ஆசிரியையின் பெயர் ஸ்ரீதேவி ருதாகி (வயது 25). இவருடன் மேலும் இருவர், கணேஷ் காலே (வயது 38) மற்றும் சாகர் (வயது 28) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து மாணவியின் தந்தையிடம் இருந்து 4 லட்சம் ரூபாயை பறித்ததோடு, மேலும் 20 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
மாணவியின் தந்தை ஒரு வியாபாரி ஆவார். இவர் மேற்கு பெங்களூரு பகுதியில் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் வசித்து வருகிறார். 2023 ஆம் ஆண்டு, இவரது 5 வயது மகளை ஒரு பள்ளியில் சேர்க்கும் போது, அங்கு பணிபுரிந்த ஆசிரியை ஸ்ரீதேவி ருதாகியை சந்தித்தார். பள்ளி சேர்க்கை நடைமுறைகளின் போது தொடங்கிய தொடர்பு, பின்னர் தனிப்பட்ட உறவாக மாறியது. இருவரும் தனி சிம் கார்டு மற்றும் தொலைபேசி மூலம் செய்திகள் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டனர். இந்த உறவு நெருக்கமாக மாறிய பிறகு, ஸ்ரீதேவி அவர்களது சந்திப்புகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி பணம் கேட்கத் தொடங்கினார்.
முதலில், ஸ்ரீதேவி அவரிடம் இருந்து 4 லட்சம் ரூபாயை பறித்தார். பின்னர், 2025 ஜனவரியில், மேலும் 15 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினார். பாதிக்கப்பட்டவர் தனது குடும்பத்துடன் குஜராத்திற்கு இடம்பெயர முடிவு செய்து, அதற்காக தனது மகளின் பள்ளி மாற்றுச் சான்றிதழை (Transfer Certificate) பெற பள்ளிக்கு சென்றார். அப்போது, ஸ்ரீதேவியின் அலுவலகத்தில் அவரை கணேஷ் மற்றும் சாகர் ஆகியோருடன் சேர்ந்து மிரட்டினார். அவர்களது தனிப்பட்ட சந்திப்புகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி, 20 லட்சம் ரூபாய் கேட்டனர். இல்லையெனில், அவற்றை அவரது குடும்பத்திற்கு அனுப்புவதாக மிரட்டினர்.
பாதிக்கப்பட்டவர் 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக பேசி, முதல் தவணையாக 1.9 லட்சம் ரூபாயை செலுத்தினார். ஆனால், மிரட்டல்கள் தொடர்ந்தன. மார்ச் 17 அன்று, ஸ்ரீதேவி மீண்டும் அவரை தொடர்பு கொண்டு, மீதமுள்ள தொகையை செலுத்துமாறு கூறினார். அதில் 5 லட்சம் ரூபாய் ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு, தலா 1 லட்சம் ரூபாய் கணேஷ் மற்றும் சாகருக்கு, மீதமுள்ள 8 லட்சம் ரூபாய் தனக்கு என்று கூறினார்.
தொடர்ந்து மிரட்டல்களால் அவதிப்பட்ட பாதிக்கப்பட்டவர், இறுதியில் காவல்துறையை அணுகினார். பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு (Central Crime Branch) உடனடியாக விசாரணையை தொடங்கியது. விசாரணையில், ஸ்ரீதேவி குறிப்பிட்ட முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு இந்த விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது. பின்னர், ஸ்ரீதேவி ருதாகி, கணேஷ் காலே மற்றும் சாகர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். தற்போது விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்