Bihar Jamui incident 
க்ரைம்

கைகூப்பி கெஞ்சும் சிறுமி.. ஆபாசமாக நடந்த கும்பல்! "இது ஆணாதிக்கம்.." கடிந்து கொள்ளும் ராகுல் காந்தி - வைரலாகும் வீடியோ

பின்னாலிருந்து சிறுமியை பிடித்து இழுத்துச் செல்ல முயற்சிக்கும் திடுக்கிடும் காட்சி பதிவாகியுள்ளது.

Vinvizhi Leninton

சமூகவலைத்தளத்தில் பள்ளி மாணவர்களை வழிமறித்து தகாத முறையில் ஒரு கும்பல் நடந்து கொண்டுள்ளது. மேலும், அதில் சிறுமியை தகாத முறையில் தொட்டு, மிரட்டிய இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி தனது அதிகாரபூர்வ X தளத்தில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

பீகாரின் ஜமுய் மாவட்டத்தில், 10-ஆம் வகுப்பு பயிலும் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி ஆகிய இருவரைத் துன்புறுத்தும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, மூன்று பேர் கைது செய்யபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காணொளியில் தகாத முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சமூக ஊடகப் பயனர்கள் பீகார் காவல்துறையைக் குறிப்பிட்டு பதிவிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜமுய் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இந்த விவகாரம் குறித்து, காவல்துறையினர் அந்த இளம் மாணவியைத் தொடர்புகொண்டதாகவும், அதில் காணப்படும் நபர்களை அடையாளம் காண்பதற்காக அக்காணொளியை ஆய்வு செய்து வருவதாகவும், சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்ட பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.

கடந்த சனிக்கிழமை (19.09.26) இரவு 7 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அந்தக் காணொளியில், ஒரு கும்பல் அந்த இரு மாணவர்களை சூழ்ந்துகொண்டு நிற்பதாக தெரிகிறது. அவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்ட மாணவரின் சட்டையின் காலரைப் பிடித்து அந்தப் பெண்ணிடமிருந்து இழுத்துச் செல்வதும் காணப்படுகிறது. அந்த மாணவி தப்பி ஓட முயற்சிக்கும்போது, ​​முகமூடி அணிந்த ஒருவர் அந்த மாணவியை பின்தொடர்ந்து வந்து, பின்னாலிருந்து அவரை பிடித்து இழுத்துச் செல்ல முயற்சிக்கும் திடுக்கிடும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும், தன்னைத் தவறாக அந்த நபர் தொடும்போது எதிர்த்துப் போராடியபடி, அந்த சிறுமி அலறும் சத்தமும் அந்த வீடியோ-வில் கேட்கிறது.

பின்னர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த தங்களது இருசக்கர வாகனத்தை நோக்கி இருவரும் ஓடுகிறார்கள், ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் அவர்களை விடாமல் துரத்துவதும் அதில் பதிவாகியுள்ளது. அந்தச் சம்பவத்திலிருந்து தப்பிப்பதற்காக அந்த இரு பள்ளி மாணவர்களும் இருசக்கர வாகனத்தில் ஏறுகின்றனர். ஆனாலும், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது. மேலும், அந்த கும்பலில் ஒருவர் அந்த மாணவியை தகாத முறையில் தொட முயல்கிறார். இறுதியாக, காணொளி முடிவடையும்போது அந்த மனைவி கைகளை கூப்பி கெஞ்சுகிறார். இவ்வாறாக அந்த காணொளி முடிவடைகிறது.

விசாரணையில், அந்தப் பள்ளி மாணவர்கள் ஜமுய் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்துவருவதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை அன்று மாலை பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட பிறகு, அவர்கள் ஸ்கூட்டரில் வெளியே சென்றுள்ளனர். இந்நிலையில், ஜமுய்-லக்கிசராய் சாலையில் இருவரும் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து பிரச்சனையில் ஈடுபட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், ராகுல் காந்தி தனது சமூக வலைதளப்பக்கமான X தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், "கைகூப்பியபடி ஒரு இளம் பெண் தன்னை விடுவிக்குமாறு கெஞ்சியபோது, ​​குண்டர்கள் அவளைத் தொட்டுத் தடவி இழுத்துச் சென்றனர். இப்படி நடந்துகொள்ள இந்த ஆண்களுக்கு யார் உரிமை கொடுத்தது? இது 'கலாச்சாரம்' அல்ல. இது ஆணாதிக்கம்: எந்தவொரு ஆணும் ஒரு பெண்ணின் உடலையும், அவளது நடமாட்டத்தையும், அவளது விருப்பங்களையும் கட்டுப்படுத்தலாம் என்ற நம்பிக்கை," என பதிவிட்டிருந்தார்.

Rahul Gandhi X post

மேலும், "குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளைத் தடுத்து, குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர்வதை நோக்கமாகக் கொண்ட போக்சோ சட்டத்தின் கீழ், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரவு 7 மணிக்கு ஒரு பொதுச் சாலையில் ஒரு சிறுமி ஏன் பாதுகாப்பாக இல்லை? என்பதற்கு பீகார் அரசு பதிலளிக்க வேண்டும்" என்றும் அவர் தனது X தளத்தில் பதிவிட்டு கோரிக்கை விடுத்திருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்