ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஒருவரின் உடல் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதால், அப்பகுதியில் பீதி ஏற்பட்டது. உயிரிழந்தவர் பாஜக மாவட்ட செயலாளர் அர்ஜுன் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காவல்துறையின் தகவல்படி, 47 வயதான அவர், தனது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. பின்னர், அவரது வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் இருந்த ஒரு மாமரத்தில் அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் காணப்பட்ட காயங்கள் இந்த வழக்கை சந்தேகத்திற்குரியதாக ஆக்கியுள்ளன.
இந்தச் சம்பவம் தன்பூர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ஜுனகேடா கிராமத்தில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை மரத்தில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்ததை, பார்த்த அப்பகுதி கிராமமக்களுக்கு அதிர்ச்சியும் பதற்றமும் ஏற்பட்டது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர். மேலும் போலீசார் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தன்பூர் காவல் நிலையத்தின் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் சந்த் கூறுகையில், “அர்ஜுன் சிங் சனிக்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறும் முன் தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவரது உடல் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார். இறந்த பாஜக நிர்வாகி அர்ஜுன் சிங்கின் மகன் அபிமன்யு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உடலில் காயங்கள் இருந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும். புலனாய்வாளர்கள் இந்த வழக்கில் சாத்தியமான அனைத்து கோணங்களையும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
காயங்கள் இருந்ததன் காரணமாக, மரணம் குறித்த சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது. அர்ஜுன் சிங் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு அதை திசைமாற்ற தூக்கிலிடப்பட்டாரா? என்பதை காவல்துறையினர் கண்டறிய முயன்று வருகின்றனர். காவல் துறை இந்த விசாரணையை மேலும் தீவிரபடுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.