

ராஜஸ்தானின் ஜோத்பூர் கிராமப்புற பகுதியில், பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் வழக்கில் நீதி கிடைக்காததால் இரண்டு சகோதரிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டை தற்கொலை சம்பவம் காவல்துறையின் செயல்பாடு மற்றும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியது குறித்து கடும் கேள்விகளையும் எதிர்ப்புகளையும் எழுப்பியுள்ளது.
தகவலின்படி, மூத்த சகோதரி கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் இ-மித்ரா சேவை மையத்தை நடத்தி வந்த மஹிபால் மற்றும் அவரது நண்பர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது ஆபாச காணொளிகளை ரகசியமாக பதிவு செய்து, அவற்றை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, பணமும் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மன உளைச்சலை தாங்க முடியாமல், அந்த பெண் கடந்த மார்ச் 20 அன்று தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, அவரது இளைய சகோதரி ஏப்ரல் 11 அன்று காவல்துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் மஹிபால் உட்பட எட்டு பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. குற்றவாளிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக தனது சகோதரியை மிரட்டி வந்ததாகவும், காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
ஆனால், FIR பதிவு செய்யப்பட்டபோதிலும், காவல்துறை சரியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும், புகார் அளித்த பிறகும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தன்னை மிரட்டியதாகவும், தனது சகோதரியின் காணொளிகளை வெளியிடுவதாக எச்சரித்ததாகவும் இளைய சகோதரி தெரிவித்திருந்தார். நீதிக்காக பலமுறை காவல்துறையை அணுகியும் நடவடிக்கை எடுக்கப்படாததால், வெள்ளிக்கிழமை தண்ணீர் தொட்டியின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பின்னர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்தார். அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த இரட்டை தற்கொலை சம்பவம் அந்த கிராம மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோத்பூரிலுள்ள எம்.டி.எம் மருத்துவமனை முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். காவல்துறை குற்றவாளிகளுக்கு சாதகமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து பேசிய ஜோத்பூர் காவல் கண்காணிப்பாளர் பி.டி. நித்யா, குற்றத்தில் ஈடுபட்ட மஹிபால் மற்றும் மற்றொரு நபர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பலரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.