க்ரைம்

“நாய் ரமேஷை கொலை செய்தது நான் தான்” - குழந்தைகளை தூக்கிடுவேன் என பணம் கேட்டு மிரட்டல்.. பறிபோன ரியல் எஸ்டேட் அதிபரின் சொகுசு கார்!

பணம் இன்றி தவித்த சூர்யா வேறு ஒருவரின் மொபைல் போனிலிருந்து டில்லிபாபுவை அழைத்து “ஐந்து லட்ச ரூபாய் பணம் வேண்டும். கொடுக்க மறுத்தால் உனது பிள்ளைகளை தூக்கி விடுவேன்

Mahalakshmi Somasundaram

சென்னை திருவொற்றியூர் ஏகவள்ளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் 40 வயதான டில்லிபாபு. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் . இவருக்கு சொந்தமான மூன்று கிரவுண்ட் இடம் புழல் அடுத்த புத்தகரம், காந்தி நகரில் உள்ளது. டில்லிபாபுவுக்கு , அவரது நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமான ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ள வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரிடம் தனது இடத்தை விற்பனை செய்ய அணுகியுள்ளார்.இவர் டில்லிபாபுவிடம் வாடிக்கையாளர்களுக்கு இடத்தை காண்பிக்க வேண்டும் எனக்கூறி அடிக்கடி ஆயிரக்கணக்கில் பணம் பெற்று வந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த டில்லிபாபு அவரது நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் தொடர்பை துண்டிக்க தனது செல்போனில் அவரது எண்ணைப் பிளாக் செய்து வைத்துள்ளார். இதனால் டில்லிபாபுவை தொடர்பு கொள்ள முடியாமல் கையில் பணம் இன்றி தவித்த சூர்யா வேறு ஒருவரின் மொபைல் போனிலிருந்து டில்லிபாபுவை அழைத்து “ஐந்து லட்ச ரூபாய் பணம் வேண்டும். கொடுக்க மறுத்தால் உனது பிள்ளைகளை தூக்கி விடுவேன், நான் யார் தெரியுமா? நாய் ரமேஷை வெட்டி கொலை செய்த குற்றவாளி நான் தான் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் என் மீது பல வழக்குகள் உள்ளது” என செல்போனில் பேசி மிரட்டி உள்ளார்.

பணம் தர மறுத்த டில்லி பாபு தனக்கு சொந்தமான மாருதி சுசுகி சொகுசு காரில் கடந்த 17ஆம் தேதி அன்று புழல், புத்தகரத்தில் உள்ள தனது காலி மனையை பார்வையிட சென்றுள்ளார். அவ்விடத்திற்கு ஆட்டோவில் வந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள், அங்கிருந்த டில்லி பாபுவிடம் “நான் போன் செய்தால் எடுக்க முடியவில்லை எனக்கு உடனே ஐந்து லட்சம் கொடுத்தால் தான் உன்னை உயிரோடு இங்கிருந்து அனுப்புவேன், இல்லையேல் இங்கேயே கொன்று போட்டு விட்டு செல்வோம்” என கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் “இணையதளத்தில் என் பெயரை போட்டால் நான் எப்பேர்பட்ட ரௌடி என வரும்” அதை பார்த்து தெரிந்து நடந்து கொள் என கூறி தகராறில் ஈடுபட்டனர்.

அதற்கு டில்லிபாபு என்னிடம் பணம் ஏதுமில்லை எனக்கூறி பணம் தர மறுக்கவே, திடீரென அவரின் மாருதி சுசுகி சொகுசு காரில் இருவர் அமர்ந்து கொண்டு காரை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தனர். தனது காரை பறிகொடுத்த ரியல் எஸ்டேட் அதிபர் டில்லிபாபு இச்சம்பவம் பற்றி புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் இது குறித்து வழக்குப்பதிவு விசாரணை செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் புழல் - அம்பத்தூர் சாலை தனியார் கல்லூரி அருகே நின்றிருந்த ஆட்டோவின் உள்ளிருந்த இரண்டு நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் , அவர்கள் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தமிழ் என்கிற தமிழரசன் (வயது 28 ) வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வேலு என்கிற தங்கவேலு (வயது 35 ) ஆகியோர்கள் சொகுசு காரை கடத்துவதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

பின்னர் புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்து , உபயோகப்படுத்திய ஆட்டோ மற்றும் ஒரு பட்டாகத்தியை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தலைமறைவான மூன்று நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.