சென்னை கோட்டூர்புரம் அருகே நடைப்பயிற்சி சென்ற கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகத் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர், மாணவியிடம் அத்துமீறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மற்றும் கேரளாவைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள், சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த (நவ 17) ஆம் தேதி மாலை இருவரும் விடுதியில் இருந்து நடைப்பயிற்சிக்காக வெளியே சென்றுள்ளனர். அப்போது கோட்டூர்புரம் பாண்டிச்சேரி சாலை மற்றும் லாக் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அந்த நபர் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி உடனடியாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அதில் பதிவான இருசக்கர வாகனத்தின் பதிவு எண் மற்றும் அந்த நபரின் அடையாளங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய அரவிந்த் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அரவிந்த் அடையாறு பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியான சிவ் நாடார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருவது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அரவிந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர். நடைப்பயிற்சி சென்ற கல்லூரி மாணவியிடம் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்