பிரசாதம் தருவதாக… சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை! வீடியோவை வெளிநாடுகளுக்கு விற்ற.. பூசாரிக்கு ஆயுள் தண்டனை!

கோயிலுக்கு வரும் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார்
uttar pradesh pocso case
Published on: 
Updated on: 
1 min read

உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஒரு அறைக்கு அழைத்து சென்று, அவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி அதனை வீடியோவாகப் பதிவு செய்த கோயில் பூசாரிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் ரூ.1.43 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள கோயிலில் பூசாரியாக இருந்த ஷ்யாம் பிஹாரி என்பவர், கோயிலுக்கு வரும் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார். சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாக கூறி அவர்களைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, அதனை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை ஆன்லைன் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்த தகவல்கள் கிடைத்ததை தொடர்ந்து, இன்டர்போல் இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது.

இதன் அடிப்படையில், மத்திய புலனாய்வு பிரிவான சிபிஐ கடந்த 2025 ஜூன் 17-ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. தொடர்ந்து, மதுரா மாவட்டத்தின் ஜெயின்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் உள்ள கோயில் பூசாரி ஷ்யாம் பிஹாரி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு, சுமார் ஒரு மாதத்திற்குள் விசாரணையை முடித்தனர். இதையடுத்து, 2025 ஆகஸ்ட் 18-ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்ற விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட சிறுமிகள், பள்ளி முதல்வர்கள், சிபிஐ அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட 14 சாட்சிகளை அரசுத் தரப்பு ஆஜர்படுத்தியது. மேலும், குற்றவாளியின் கைப்பேசியில் இருந்து மீட்கப்பட்ட வீடியோ உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள், தடயவியல் பரிசோதனை அறிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த ஆதாரங்களை ஆய்வு செய்த மதுரா கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியும், சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதியுமான பிரஜேஷ் குமார், பூசாரி ஷ்யாம் பிஹாரியை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதித்தார். அத்துடன் ரூ.1.43 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகை முழுவதையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோயிலுக்கு வரும் சிறுமிகளின் நம்பிக்கையைப் பயன்படுத்தி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதுடன், அதனைப் பணத்திற்காக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த பூசாரிக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தண்டனை உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.