Chennai woman police constable complaint 
க்ரைம்

“பெண் போலீசை காதலித்து ஏமாற்றிய சக காவலர்” - 9 மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு திருமணத்திற்கு மறுப்பு.. சாதிதான் காரணமா?

முதன்முதலில் சந்தித்ததாகவும், அப்போது ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்...

Mahalakshmi Somasundaram

சென்னையில் பெண் போலீசை சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து, அவருடன் 9 மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு, தற்போது சாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்ததாக எழுந்த புகாரில் சக போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெண் போலீஸ் அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் 26 வயதுடைய அஜய் ஆகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜய் ஆகாஷ். இவர் திருச்சியில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் காவலராக பணியாற்றி வந்தார்.

இதற்கிடையே, சென்னையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் பணிபுரியும் பெண் போலீஸ் ஒருவர், கடந்த ஜூன் மாதம் எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அஜய் ஆகாஷ் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், தனது சொந்த ஊர் அறந்தாங்கி என்றும், போலீஸ் பணியில் சேருவதற்கு முன்பே அஜய் ஆகாஷுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற குத்துச்சண்டைப் பயிற்சியின்போது இருவரும் முதன்முதலில் சந்தித்ததாகவும், அப்போது ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். பெண் போலீஸ் கடந்த 2020ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்துள்ளார். அதன்பிறகு, 2022ஆம் ஆண்டு அஜய் ஆகாஷும் போலீஸ் பணியில் சேர்ந்துள்ளார். இருவரும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றி வந்தாலும், அடிக்கடி சந்தித்து தங்களது காதலைத் தொடர்ந்து வந்ததாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2025ஆம் ஆண்டு சுமார் 9 மாதங்கள் இருவரும் பெண் போலீசின் நரியங்காடு வீட்டில் கணவன் - மனைவியாக ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த நிலையில் இதற்கு பெண் போலீசின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அஜய் ஆகாஷின் குடும்பத்தினர் பெண் போலீசின் சாதியைக் காரணம் காட்டி இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, குடும்பத்தினரின் பேச்சைக் கேட்டு அஜய் ஆகாஷும் தனது முடிவை மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், அஜய் ஆகாஷுக்கு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்ததாகவும், அதற்கான நிச்சயதார்த்தமும் நடைபெற்றுவிட்டதாகத் தனக்குத் தெரியவந்ததாகவும் பெண் போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார். தன்னை நீண்ட ஆண்டுகளாகக் காதலித்து, தன்னுடன் சுமார் 9 மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு தற்போது சாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்ய மறுப்பதாகக் கூறியுள்ள பெண் போலீஸ், அஜய் ஆகாஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் எழும்பூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு, போலீஸ்காரர் அஜய் ஆகாஷை கைது செய்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.