க்ரைம்

“மகன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம்” - கதவை திறந்த பெண்ணுக்கு விழுந்த அரிவாள் வெட்டு!

கோமதியை வீட்டில் இருந்த அவரது மகன் கண் முன்னே இரண்டு மர்ம நபர்கள்..

Mahalakshmi Somasundaram

கடலூர் மாவட்டம், சிதம்பரம் சின்ன செட்டி தெருவில் வசித்து வருபவர் நடராஜ். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். நடராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கோமதி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். எனவே நடராஜ் மனைவி கோமதி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடராஜ் வேலைக்கு சென்ற பின் பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் அவரது மகள் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில் பின்பக்க கதவை மர்ம நபர்கள் தட்டி உள்ளனர், சத்தம் கேட்டு கதவை திறந்த கோமதியை வீட்டில் இருந்த அவரது மகன் கண் முன்னே இரண்டு மர்ம நபர்கள் சரமாரியாக கத்தியால் வெட்டினர், இதில் கோமதியின் கழுத்து மற்றும் கைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தக்காயங்களோடு மயங்கி விழுந்துள்ளார்.

இதனை பார்த்து மகன் அலறிய நிலையில் கோமதியை கத்தியால் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்த உடன் சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட வருகிறார். மேலும் வீட்டில் இருந்த பெண்ணை சரமாரியாக வெட்டிய காரணம் என்ன? யார் வெட்டியது இதில் யாருக்காவது முன்விரோதம் உள்ளதா அல்லது திருட முயற்சி செய்வதற்காக வெட்டப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கோமதியை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, குற்றவாளிகளை பிடிப்பதற்காக இரண்டு தனிப்படைகள், காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்டு போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று தீபாவளி முடிந்த நிலையில் பெண் ஒருவரை வீடு புகுந்து மகன் கண்முன்னே வெட்டி கொலை முயற்சி செய்த சம்பவம் சிதம்பரம் நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.