
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள மங்கலக்கரை புதூர் பகுதியை சேர்ந்தவர் 23 வயதுடைய குணா. இவர் அதே பகுதியில் கூலித் தொழில் செய்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான குணா வேலையை முடித்துவிட்டு தினத்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். சில நாட்களில் இரவு கூட குணா வீட்டிற்கு செல்லாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று குணாவும் அவருடைய நண்பரான கேசவன் என்பவரும் தங்களது மற்ற நண்பர்களுடன் சேர்ந்து மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ் ரோடு பகுதியில் உள்ள மதுபான கடைக்கு மது அருந்த சென்றுள்ளனர். பின்னர் அனைவரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்திவிட்டு குணாவை வீட்டிற்கு செல்ல அழைத்து செல்லும் போது மதுபோதை அதிகமானதால் குணாவால் நடக்க முடியவில்லை என சொல்லப்படுகிறது.
இதனால் அங்கு அருகே இருந்த ஒரு கடைவாசலில் போதையில் இருந்த குணா அமர வைத்துவிட்டு கேசவன் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மேட்டுப்பாளையம் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த சரவணன்,நெல்லித்துறை ரோடு பகுதியை சேர்ந்த பாபு ஆகியோர் குணாவிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் தகராறு முத்திப் போக சரவணன் மற்றும் பாபு ஆகியோர் குணாவை சரமாரியாக தாக்கி விட்டு அவர் வைத்திருந்த பணம் மற்றும் செல்போனை எடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில் மயங்கி கிடந்த குணாவை மீண்டும் அவ்வழியாக வந்த கேசவன் பார்த்துவிட்டு முதலுதவி சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குணா இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர் சரவணன் மற்றும் பாபுவை கைது செய்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மது போதையில் இருந்தவர் நகை மற்றும் பணத்திற்காக அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.