dhivya and rajadurai  
க்ரைம்

“கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஆறு வயது மகனை கொன்ற தாய்” - பொதுவெளியில் கட்டையால் தாக்கப்பட்ட சிறுவன்.. 6 வருடங்களுக்கு பின் கிடைத்த நீதி!

அங்கு பொதுமக்கள் முன்னிலையிலேயே சிறுவனை தடிமனான குச்சியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்...

Mahalakshmi Somasundaram

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதுடைய திவ்யா. இவருக்கு திருமணமாகி 6 வயதில் அபிஷேக் என்ற மகனும், 3 வயது மகளும் இருந்த நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் திவ்யா கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். எனவே திவ்யா அப்பகுதியில் உள்ள அட்டைப்பெட்டி தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த திவ்யாவுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான 35 வயதுடைய ராஜதுரை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பழகி வந்த நிலையில் நாளடைவில் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்து, அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அடிக்கடி ராஜதுரை திவ்ய வீட்டிற்கு சென்று நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் தங்களது உறவுக்கு குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கருதிய திவ்யாவும் ராஜதுரையும், அபிஷேக் மற்றும் அவரது தங்கையை அடித்து துன்புறுத்தி வந்திருக்கின்றனர். குறிப்பாக 6 வயது அபிஷேக் அதிகளவில் கொடுமைகளுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் ஒருமுறை தன்னை பார்க்க வந்த தந்தையிடம், அபிஷேக் “தாயும் வீட்டிற்கு அடிக்கடி வரும் நபரும் தன்னை தொடர்ந்து அடித்து துன்புறுத்துவதாக கதறியபடி தெரிவித்ததுடன், தன்னையும் தங்கையையும் அங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள்” என கேட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அபிஷேக்கின் தந்தை வீட்டு வேலைகள் முடிந்ததும் அழைத்துச் செல்வதாக ஆறுதல் கூறி அவர்களை திவ்யா வீட்டில் விட்டு சென்றிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து அபிஷேக் தனது தந்தையிடம் கூறியதை அறிந்த திவ்யா ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிறுவன் மீதான கொடுமை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி, திவ்யாவும் அவரது கள்ளக்காதலன் ராஜதுரையும் அபிஷேக்கை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஒரு கடைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பொதுமக்கள் முன்னிலையிலேயே சிறுவனை தடிமனான குச்சியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். சிறுவன் வலியால் அலறிய போதும் தாக்குதலை நிறுத்தாத இருவரையும் பார்த்த அங்கிருந்தவர்கள் குழந்தையை ஏன் இவ்வாறு அடிக்கிறீர்கள் என கேட்டுள்ளனர். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் இருவரும் சேர்ந்து தொடர்ந்து தாக்குதல் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அபிஷேக் திடீரென மயங்கி விழுந்த நிலையில் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறுவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அபிஷேக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, திவ்யா மற்றும் ராஜதுரை ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், குழந்தை மீது நீண்டகாலமாக கொடுமைகள் நடத்தப்பட்டதும், தாக்குதலின் விளைவாகவே உயிரிழப்பு ஏற்பட்டதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு கோவையில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையின் போது சாட்சிகள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் பிற ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கின் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். அதில், சிறுவன் அபிஷேக்கை கொலை செய்த குற்றச்சாட்டு திவ்யா மற்றும் ராஜதுரை மீது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து ராஜதுரைக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் இரட்டை ஆயுள் தண்டனையை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும், சிறுவனின் தாய் திவ்யாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கள்ளக்காதல் உறவுக்கு இடையூறாக இருந்ததாகக் கருதி 6 வயது மகனை பொதுமக்கள் முன்னிலையிலேயே அடித்துக் கொலை செய்த வழக்கில், தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்ட இந்த தீர்ப்பு கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.