கோவை மாவட்டம் வெள்ளிமலைப்பட்டிணம் பகுதியில், திமுக கிளை பிரதிநிதி ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் திமுக கிளை அவைத்தலைவர் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளிமலைப்பட்டிணத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நாகராஜ், திமுக கிளை பிரதிநிதியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் நேற்று (ஆக.28) காலை சுமார் 6 மணியளவில், 55 வயதுடைய வசந்தா என்பவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் டீ வாங்குவதற்காக சென்றுள்ளார்.
அப்போது, நாகராஜின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவரும், முன்னாள் திமுக கிளை அவைத்தலைவருமான 61 வயதுடைய கந்தசாமி, அவரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நாகராஜின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலின்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கந்தசாமிக்கும் கையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பேரூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆலாந்துறை காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனிடையே, நாகராஜ் தனது மனைவி பாக்யாவுடன் தவறான தொடர்பில் இருந்ததாக சந்தேகித்ததன் காரணமாக கந்தசாமி இந்த கொலையை செய்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், பாக்யாவுக்கும் நாகராஜுக்கும் இடையே எந்தவித தவறான தொடர்பும் இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொலைக்கான உண்மையான காரணம் என்ன, சம்பவத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே ஏதேனும் முன்விரோதம் இருந்ததா, அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கந்தசாமியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் டீ வாங்கச் சென்ற திமுக கிளை பிரதிநிதி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெள்ளிமலைப்பட்டிணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.