கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகேயுள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவர் சூலூர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இரவுப் பணியில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். அப்போது கண்ணம்பாளையம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மனைவியுடன் சந்தோஷ்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது, இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களின் பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.
சந்தோஷ் கடந்த ஒரு வருட காலமாக அந்த பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது இந்த விவகாரம் ரவிச்சந்திரனுக்குத் தெரிய வந்ததையடுத்து, சந்தோஷை “தனது மனைவியுடனான தகாத உறவை கைவிடுமாறு கூறி” பலமுறை எச்சரித்துள்ளார். எனினும் சந்தோஷ் உறவைத் தொடர்ந்ததால், ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், தனது நண்பரான நவீன் குமார் என்பவருடன் சேர்ந்து சந்தோஷைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
அந்த திட்டத்தின் படி நேற்று இரவு, ரவிச்சந்திரனும், நவீன் குமாரும் சந்தோஷ் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெட்ரோல் பங்க்கிற்கு வந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இரண்டு நபர்களும் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியைக் எடுத்து சந்தோஷை சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில் சந்தோஷ்.பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து ரவிச்சந்திரனும் அவரது நண்பர்களும் அப்பகுதியில் தப்பி சென்றனர்.
இந்தக் கொடூரச் சம்பவம், பெட்ரோல் பங்க்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இரண்டு நபர்கள் உள்ளே புகுந்து சந்தோஷை சரமாரியாகக் குத்தி கொலை செய்யும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் தற்போது வெளியாகி, பொதுமக்கள் மத்தியிலும் காவல்துறையினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த சூலூர் காவல்துறையினர், சந்தோஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கொலை செய்த ரவிச்சந்திரன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த நவீன் குமார் ஆகிய இருவரும் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
சரணடைந்த நபர்களிடம் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் அவர்கள் வந்து சென்ற இருசக்கர வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தற்போது, சரணடைந்த நபர்களிடம், சிசிடிவி காட்சியில் பதிவான கொலைச் செயலின் பின்னணி, கொலைக்கான காரணம் மற்றும் வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் சூலூர் பகுதியில் தொடர்ந்து பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.