விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் வேலைக்கு செல்வதால் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, அங்குள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பள்ளியில் தன்னுடன் படித்து வந்த மாணவர் ஒருவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.
மாணவி அவரது பாட்டி வேலைக்கு செல்லும் நிலையில் வீட்டில் தனியாக இருந்த நேரங்களில் அந்த மாணவரும் அங்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது இருவரும் தனிமையில் இருந்த நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த சிறுமியின் பாட்டி அவரது பெற்றோருக்கு தகவல் அளித்த நிலையில் குடும்பத்தினர் சிறுமியை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் மாணவி சுமார் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவருடன் தொடர்பு இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாணவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இஹற்கிடையில் மாணவர் வழக்கு விவரம் அறிந்து தலைமைறைவான நிலையில் அவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும், மாணவியின் உடல்நிலை மற்றும் அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சிறுமி தொடர்பான சம்பவம் என்பதால், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.