தருமபுரி மாவட்டம் பழைய இண்டூர் பகுதியில், செலவுக்கு பணம் தர மறுத்ததால் போதையில் இருந்த மகன், பெற்ற தாயை இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பழைய இண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதுடைய சித்தன். கட்டிட மேஸ்திரியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி 45 வயதுடைய சின்னபாப்பா. இந்த தம்பதிக்கு 19 வயதில் தேவராஜ் என்ற மகன் உள்ளார்.
சிறுவயதிலிருந்தே போதைப் பழக்கத்திற்கு அடிமையான தேவராஜ், நிலையான தொழில் இல்லாமல் அவ்வப்போது கிடைக்கும் கூலித்தொழில் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேவராஜ் கஞ்சா போதையில் இண்டூர் காவல் நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த காவலர் உடை மற்றும் தொப்பியை அணிந்துகொண்டு சாலையில் நடந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் தேவராஜ் மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சிறையில் இருந்த தேவராஜை அவரது தாய் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியில் அழைத்து வந்துள்ளார். இதற்கிடையில் அவ்வப்போது குடிக்க மற்றும் கஞ்சா அடிக்க தாய் தந்தையிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நேற்று(அக் 29) இரவு மது மற்றும் கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்த தேவராஜ், தனது தாயார் சின்னபாப்பாவிடம் வழக்கம் போல பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது செலவுக்குப் பணம் கேட்டதாகவும், அதற்கு சின்னபாப்பா பணம் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ், இரும்புப் பட்டையை எடுத்து தாயாரைச் சரமாரியாகத் தாக்கியதுடன், பலமுறை குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சின்னப்பாப்பாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சின்னபாப்பா தலை சிதைந்து மூளை வெளிவந்த நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். அருகில் இரும்புப் பட்டையுடன் தேவராஜ் நின்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த இண்டூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னபாப்பாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தேவராஜைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரியில் போதையில் பெற்ற தாயையே மகன் அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.