dindigul son killed murder  
க்ரைம்

“என் பொண்டாட்டி தான் அப்பாவை கொன்னுட்டா” - தந்தையை கொன்று டிராமா போட்ட மகன்.. குடிபோதையில் செய்த சம்பவம்!

இதனால் ஆத்திரமடைந்த முத்தையா, கீழே கிடந்த கட்டையை எடுத்து பெருமாளை சரமாரியாக தாக்கியுள்ளார்...

Mahalakshmi Somasundaram

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே, மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட தந்தையை கட்டையால் தாக்கி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள சிக்குபோல கவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் ஊமைச்சாமி என்ற 60 வயதுடைய பெருமாள். விவசாயியான இவர், அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் மனைவி சுப்புலட்சுமி (58) மற்றும் மகன் முத்தையா (30) ஆகியோருடன் வசித்து வந்தார்.

ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்த முத்தையா அதே பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நந்தினி என்பவரை காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் நந்தினி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்தையா மீண்டும் தனது மனைவி நந்தினியிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று (செப் 25) இரவு மது போதையில் இருந்த முத்தையா, நந்தினியிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன நந்தினி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனைப் பார்த்த முத்தையாவின் தந்தை பெருமாள், மகனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்தையா, கீழே கிடந்த கட்டையை எடுத்து பெருமாளை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த பெருமாள் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பெருமாள் உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களிடம், தனது மனைவி நந்தினி தான் பெருமாளை கட்டையால்  தாக்கியதாகவும் “என் பொண்டாட்டி தான் அப்பாவை கொன்னுட்டா” முத்தையா கூறி நாடகமாடியதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மது போதையில் முத்தையாவே தனது தந்தை பெருமாளை கட்டையால் தாக்கி கொலை செய்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து முத்தையா மீது வழக்குப்பதிவு செய்த வடமதுரை போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனே தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்