திண்டுக்கல் - நத்தம் நெடுஞ்சாலையில், திமுக பிரமுகர் ‘பாத்ரூம்’ முருகன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த வீரபத்திரன், நேற்று (அக் 06) பட்டப்பகலில் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி ஒப்பந்ததாரரும் திமுக பிரமுகருமான ‘பாத்ரூம்’ முருகன், கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் காரில் கடத்தப்பட்டு, ஓடும் காரிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் கணக்கு தொடர்பான பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதமே இந்தக் கொலைக்கு காரணம் எனக் கூறப்பட்டது.
இந்த வழக்கில் முருகனின் கார் ஓட்டுநர் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்கள் அனைவரும் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முருகன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வீரபத்திரன், நேற்று தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் - நத்தம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் நொச்சி ஓடைப்பட்டி அருகே சென்றபோது, மர்ம கும்பல் ஒன்று இருசக்கர வாகனத்தை வழிமறித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, வீரபத்திரனை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த பகுதியில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில், பலத்த காயமடைந்த வீரபத்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலின்போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த வீரபத்திரனின் மனைவியும் படுகாயமடைந்தார். அவரை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார், வீரபத்திரனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், புறநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மஞ்சிமா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வகையில், கொலையாளிகள் தப்பிச் சென்ற ஸ்கார்பியோ காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அந்த காரில் இருந்து பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிவாங்கும் வகையில் வீரபத்திரன் கொலை செய்யப்பட்டாரா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்தக் கொலை சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்