லக்னோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறைக்குள் 20 வயதுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 30 வயது மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
உத்திர பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக்கின் இந்த வழக்கில் தலையிட்டத்தை அடுத்து, சுகாதாரத்துறை மருத்துவமனைக்கு சீல் வைத்தது. மருத்துவரின் உரிமத்தை இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் தொடங்கியது. லக்னோவின் பக்ஷி-கா-தலாப் பகுதியில் உள்ள இந்தௌரபாக் என்ற இடத்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில், வலிப்பு நோய்க்கான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளி ஒருவரிடமிருந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மே 21 அன்று அறுவை சிகிச்சை அறைக்குள் மாணவிக்கு மயக்க ஊசி செலுத்திய பின்னர், குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் விஜயகுமார் கிரி அவரைக் கற்பழித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் தந்தையின் கூற்றுப்படி, அவரது மகள் மீண்டும் மீண்டும் ஏற்படும் வலிப்பு நோய் தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக மே 19 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மே 21 ஆம் தேதி பிற்பகல் சுமார் 3 மணியளவில் தனது மகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு டாக்டர் கிரி, ஆக்சிஜன் உதவி அளிப்பதாகக் கூறி அவரை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறினார்.
ஆரம்பத்தில் நோயாளியின் மூத்த சகோதரியும் ஒரு செவிலியரும் அவருடன் அறுவை சிகிச்சை அறைக்குள் சென்றனர், ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு மருத்துவர் அவர்கள் இருவரையும் வெளியே செல்லுமாறு கேட்டுக் கொண்டார். காவல்துறையிடம் அளித்த புகாரில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, மருத்துவர் அவரது கையில் பொருத்தப்பட்டிருந்த நரம்புவழி ஊசி மூலம் மயக்க மருந்தைச் செலுத்தியதாகவும், அதன் பிறகு அவர் சுயநினைவை இழந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தின்படி, சிறிது நேரம் கழித்து அவருக்குப் பகுதி சுயநினைவு திரும்பியதும், மருத்துவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டி அழுதுகொண்டே அறுவை சிகிச்சை அறையிலிருந்து வெளியே ஓடினார். தனது உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டவர் சில ஆண்டுகளாகப் பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததாகவும், தற்போது 12-ஆம் வகுப்பில் படித்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஏடிசிபி (வடக்கு) ட்விங்கிள் ஜெயின் உறுதிப்படுத்தினார். துணை முதல்வர் பிரஜேஷ் பதக் இவ்விஷயத்தை கவனத்தில் கொண்டு, மருத்துவமனை மற்றும் மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் பதக், “மாநில அரசு பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உறுதுணையாக நிற்கிறது, மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.
மருத்துவமனைக்கு சீல் வைக்கவும், குற்றம் சாட்டப்பட்டவரின் மருத்துவ உரிமத்தை இடைநீக்கம் செய்யவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.