“ரத்த காயங்களுடன் புதரில் கிடந்த 10 சிறுமியின் சடலம்” - விடிய விடிய நடந்த போராட்டம்.. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளால் பரபரப்பு!

வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த முன்பே குழந்தைக்கு அறிமுகமான கார்த்திக்..
Kovai case
Published on
Updated on
2 min read

கோவை சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த மே 21 அன்று மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளார். இருட்டியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. எனவே அச்சமடைந்த பெற்றோர்கள் உடனடியாக சூலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது கண்ணம்பாளையம் குளக்கரை பகுதியில் அந்தச் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பவன் குமார் ரெட்டி, சூலூர் காவல் நிலையத்திற்கு நேரில் வருகை தந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினார். போலீஸார் தனிப்படை அமைத்து நடத்திய அதிரடி விசாரணையில், வழக்கு பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அதே பகுதியை சேர்ந்த 2 சந்தேக நபர்கள் பிடிபட்டனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த, தற்போது சூலூர் பள்ளபாளையம் பகுதியில் வசித்து வரும் 33 வயதுடைய கார்த்தி என்பவன் சிறுமியைக் கடத்திக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். மேலும், அவனுக்கு உதவியதாக மோகன்ராஜ் என்பவனையும் போலீசார் பிடித்துள்ளனர். இருவரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த முன்பே குழந்தைக்கு அறிமுகமான கார்த்திக் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றதும், அவருடன் மோகன்ராஜ் இருந்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையே, படுகொலை செய்யப்பட்ட குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும், பொதுமக்களும் திரண்டு சூலூர் காவல் நிலையத்தின் முன்பாக விடிய விடியத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். "குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் அல்லது என்கவுண்டர் செய்யப்பட வேண்டும்" என்று அவர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்து முழக்கங்களை எழுப்பினர்.

இரவு முழுவதும் நீடித்த இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்தது, அங்கு குவிக்கப்பட்டிருந்த உயர்தர போலீஸ் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் நள்ளிரவிலும், அதிகாலையிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். "குற்றவாளிகள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூலூர் காவல் நிலைய முன்பாக இன்னமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் கோவை பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com