திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் அனு பிரியா. இவர் சாப்ட்வேர் டிசைனராக வேலை பார்த்து வரும் நிலையில் வேப்பம்பட்டு அடுத்துள்ள பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜிம் மாஸ்டர் பிரவீன் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணம் இரு வீட்டாரின் ஒத்துழைப்போடு திருநின்றவூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மணமகன் பிரவீன் குமாரின் தாய் அமமுக மாவட்ட மகளிர் அணி செயலாளர் என்பதால் டிடிவி தினகரன் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் பிரவீன் குமாரின் தாய் செல்வகுமாரி 100 சவரன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி ஏழு லட்சம் ரொக்கம் மற்றும் 25 லட்சம் மதிப்புள்ள தார் கார் கேட்டுள்ளார். திருமணத்தின் போது 60 சவரன் தங்க நகையும், தார் காரும், ஒரு கிலோ வெள்ளி பொருட்களும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. கேட்ட நூறு சவரன் தங்க நகையில் 60 சவரன் நகைகள் மட்டுமே போடப்பட்ட நிலையில் மீதி 40 சவரன் நகைகளை கேட்டும் புதிதாக போர்டு எண்டோவரில் வந்துள்ள 60 லட்சம் மதிப்புள்ள காரை வாங்கித் தரக் கூறியும் செல்வகுமாரி மருமகள் அனுப்பிரியாவிடம் கேட்டு அவரை அடித்து துன்புறுத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் அணிந்து வந்த 60 சவரன் நகையில் 40 சவரனை எடுத்துக் கொண்டதாகவும், பணம் 7 லட்சத்தையும் எடுத்துக் கொண்டு கொடுமை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட அனுபிரியா மற்றும் அவரது கணவர் பிரவீன் ஆகியோர் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாமியார் வரதட்சணை கொடுமை செய்வதோடு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அனுப்பிரியா “எனது மாமியார் செல்வகுமாரி அமமுக கட்சியில் இருந்து வருகிறார். திருமணத்தின் போது கட்டாயம் வரதட்சணை தர வேண்டும் நான் கேட்டதை கொடுத்தால் மட்டுமே திருமணம். என எங்களை மிரட்டினார். மேலும் திருமணத்திற்கு பின்பு தினந்தோறும் பணம் நகை கேட்டு கொடுமை செய்கிறார், பலமுறை அடித்தும் என்னை தகாத வார்த்தைகளால் பேசியும் மன உளைச்சல் ஏற்படுத்தி உள்ளார். எனது கணவர் கூறியும் கேட்காமல் தொடர்ந்து எங்களை கொடுமை செய்து வருவதோடு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். மேலும் வீட்டில் உள்ள பணிப்பெண் சாவித்திரியும் எனது மாமியார் பேச்சை கேட்டு என்னை ‘கொலை செய்து கார்டனில் புதைத்து விடுவேன்’ என மிரட்டி வருகிறார்” என்று கூறியுள்ளார்.
எனவே தனது மாமியார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் அளித்துள்ளார். ஆனால் உதவி ஆய்வாளர் வேளாங்கண்ணி தனது மாமியார் கட்சியில் இருப்பதால் அவருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தன்னிடம் தகுந்த ஆதாரங்கள் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இது போல உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தினால் ரிதன்யா போல தற்கொலை செய்துகொள்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை என தெரிவித்துள்ளார் இந்நிலையில் அனுப்ரியா அளித்த புகார் குறித்து பேசிய காவல் துறையினர் சி எஸ் ஆர் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.