தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் செகந்திராபாத் பகுதிக்கு அருகே உள்ள சில்கல்குடா பகுதியை சேர்ந்தவர் 20 வயதுடைய யுவன். இவர் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து நான்கு வருடங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இருவரும் அடிக்கடி வீட்டிற்கு தெரியாமல் வெளியில் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். அதுபோல வெளியில் சுற்றும் போது, இவர்களது காதல் குறித்து அறிந்த ரேவதி குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருவரையும் கண்டித்ததாக சொல்லப்படுகிறது.
இருப்பினும் தொடர்ந்து இருவரும் காதலித்து வந்த நிலையில், ஆத்திரமடைந்த பெண் குடும்பத்தினர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யுவன் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் யுவனை அடித்து மிரட்டி இருக்கின்றன. பின்னர் காதலர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருந்த நிலையில் மீண்டும் சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பேசி வந்துள்ளனர். இதனை அறிந்த ரேவதியின் குடும்பத்தினர் அவரை மிரட்டிய நிலையில் பெற்றோரிடம் "இனி யுவனிடம் பேசமாட்டேன்" என ஒப்புதல் அளித்திருக்கிறார்.
அதனை தொடர்ந்து யுவன் அவரது குடும்பத்துடன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஜவஹர் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்திருக்கிறார். தற்போது கல்லூரியில் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு முடிந்து குடும்பத்தினர் திருப்பதிக்கு செல்லலாம் என திட்டமிட்டுள்ளனர். எனவே கடைசிக்கு தேர்வு முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளியில் சென்ற யுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தெருவில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அப்பகுதிக்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 5 மர்ம நபர்கள் யுவனை சரமாரியாக 17 இடங்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து யுவனின் நண்பர்கள் அப்பகுதி மக்கள் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் யுவனின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது யுவனை கொலை செய்தது ரேவதியின் உறவினர்கள் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து மூவரை கைது செய்த போலீசார் மேலும் இருவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் யுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீதமுள்ள இரண்டு குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.