Erode Nurse Uthira Death Case 
க்ரைம்

“நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண் செவிலியரின் சடலம்” - கணவர் கொடுத்த அந்த ஒரு புகார்.. பாலியல் வன்கொடுமை செய்து கொலை?

செவிலியர் வீடு திரும்பாத நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

Mahalakshmi Somasundaram

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கடந்த (அக் 14) ஆம் தேதி காணாமல் போன இளம் செவிலியர், மூன்று நாட்களுக்குப் பிறகு சாலையோரத்தில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். கட்டுமானத் தொழிலாளியான இவருக்கும், நர்சிங் படித்த உத்திரா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி ஓராண்டு ஆகிறது.

இந்நிலையில், உத்திரா கடந்த (அக் 3) ஆம் தேதி ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியில் சேர்ந்துள்ளார். இதற்காக இருவரும் அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த (அக் 14) ஆம் தேதி வழக்கம்போல் வேலைக்குச் சென்ற உத்திரா, பணியை முடித்துவிட்டு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் ரஞ்சித் குமார், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து உத்திராவைத் தேடி வந்த நிலையில், இன்று காலை பல்லகவுண்டம்பாளையம் அருகே கோவை–சேலம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதியில், சாலையோர மரத்தடியில் இளம் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக பெருந்துறை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டது காணாமல் போன உத்திரா என்பது தெரியவந்தது. அவர் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. வேலைக்குச் சென்ற இளம் செவிலியர் வீடு திரும்பாத நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், பிரேதப் பரிசோதனை முடிவுகள் மற்றும் விசாரணையின் அடிப்படையிலேயே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம் செவிலியர் காணாமல் போனது முதல் சடலமாக மீட்கப்பட்டது வரையிலான சம்பவங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.