கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள தலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான சுபிதா. இவர் அதே பகுதியை சேர்ந்த தச்சு தொழிலாளியான அருண் பிரசாத் என்பவரை காதலித்து கடந்த 10 வருடங்களுக்கு முன் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒன்பது மற்றும் நான்கு வயதில் இரு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் அருண் பிரசாத் வெளியூர்களுக்குச் சென்று அங்கேயே தங்கி வேலை பார்த்து வரும் நிலையில் எப்போதாவதுதான் வீட்டுக்கு வந்து செல்வார் என சொல்லப்படுகிறது, அப்போது வீட்டில் தனியாக இருந்த சுபிதா இன்ஸ்டாகிராமில் மூழ்கியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்த சுபிதாவிற்கு கடந்த 3 வருடங்களுக்கு முன் பக்கத்து ஊரை சேர்ந்த அனிஸ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அங்குள்ள அரசு பள்ளியில் காலை உணவுத் திட்ட சமையல் பணிக்கு சென்ற சுபிதா அனிஸை நேரடியாக சந்தித்து பழக தொடங்கிய நிலையில் அனிஸ் உடனான பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. அதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி வெளி ஊர்களுக்கு சென்று தனிமையில் சந்தித்து வந்ததாகவும் ஒரு கட்டத்தில் சுபிதா கணவர் இல்லாத நேரம் தனது காதலன் அனிஸை வீட்டிற்கே அழைத்து வந்து தனிமையில் உல்லாசமாக இருந்தார் என சொல்லப்படுகிறது.
இருவரும் வீட்டிலேயே சந்தித்து தனிமையில் இருப்பதை நேரடியாக கண்ட கணவர் அருண் பிரசாத் ஆத்திரமடைந்து மனைவியை தட்டி கேட்டிருக்கிறார். இதனால் கோபமடைந்த சுபிதா குழந்தைகளுடன் கணவரின் வீட்டை விட்டு வெளியேறி பக்கத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தார். மேலும் கடந்த 2 வருடங்களாக தாய் வீட்டில் இன்ஸ்டாகிரம் காதலன் அனிஸ் உடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் சுபிதா வீட்டிற்கு உணவருந்த வரும் திருமணம் ஆகாத அவரது சித்தப்பா மாற்றுத் திறனாளியான ராஜேஷ் இன்ஸ்டாகிராம் காதலன் அனிஸ் உடனான தொடர்பை துண்டிக்க சொல்லி கண்டித்திருக்கிறார்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு சுபிதா வீட்டிற்கு ராஜேஷ் உணவருந்த சென்ற போது சுபிதா இன்ஸ்டாகிராம் அனிஸ் உடன் செல்போனில் பேசி கொண்டிருப்பதை பார்த்து ஆத்திரத்தில் சத்தம் போட்டு கண்டித்ததோடு அருகில் கிடந்த கம்பியை எடுத்து தலையில் ஓங்கி அடித்தார். இதில் சுபிதா நிலை குலைந்து கீழே விழுவதை வீடியோ காலில் பார்த்து கொண்டிருந்த இன்ஸ்டாகிராம் காதலன் அனிஸ் வீட்டிற்கு ஓடி வந்து ராஜேஸை தாக்கி தகரறில் ஈடுபட்டு இருக்கிறார். ஆனால் ஊர்க்காரர்கள் திரண்டதால் அங்கிருந்து அனிஸ் தப்பி சென்றார்.
இதனால் மேலும் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற ராஜேஷ் மீண்டும் சுபிதாவை கம்பியால் தாக்கி வீட்டில் கிடந்த அரிவாளை எடுத்து சுபிதாவை சரமாரியாக வெட்டி இருக்கிறார். இதில் நிலை குலைந்த சுபிதா அறைக்குள் ஓடி சென்று கதவை பூட்டிய படி இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். காலையில் வெளியூர் சென்று வீடு திரும்பிய சுபிதாவின் தாயார் மகள் அறையை விட்டு வெளியே வராததால் தட்டி பார்த்து விட்டு சந்தேகமடைந்து கணவரின் தம்பியான ராஜேஷை அழைத்த போது வீட்டுக்கு வந்த ராஜேஷ் சுபிதா உயிரிழந்திருக்கலாம் என அஞ்சி கம்பி மற்றும் அரிவாளுடன் இரணியல் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதனை தொடர்ந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த சுபிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதனையடுத்து ராஜேஸ் மீது சுபிதாவின் தாயார் சங்கரி கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்த இரணியல் போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர். இன்ஸ்டாகிராம் காதலனுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த இளம்பெண் சித்தப்பாவால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.