க்ரைம்

மகளை கிண்டல் செய்தவரை.. திட்டமிட்டு கொலை செய்த தந்தை! வேறொரு மாவட்டத்தில்.. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்

ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்தில் கொண்டு வந்து உடலை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Muthu Lakshmi

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சிவல்சருகு கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலி முருகன் (வயது 38). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற சங்கிலி முருகன் வீடு திரும்பவில்லை என செம்பட்டி காவல் நிலையத்தில் அவரின் மனைவி செப்டம்பர் 10ம் தேதி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்த காவல்துறை சங்கிலி முருகனை தேடி வந்தனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த மூவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பாக்கியசெல்வம் (48) என்பவரின் நடத்தையில் சந்தேகம் மூண்டதில் விசாரணை தீவிரமானது. அதில் சங்கிலி முருகனை கொலை செய்ததாக அவர் போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இதைதொடர்ந்து போலீசார் பாக்கியசெல்வதிடம் நடத்திய விசாரணையில் அவரது நண்பர்கள் முருகன் (42), மருதுபாண்டி (44) உட்பட 4 பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதில் சங்கிலி முருகனை திண்டுக்கல் - கொடைரோடு சாலை அருகே காரில் வைத்து கொலை செய்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பாக்கிய செல்வம் உட்பட மூன்று பேரை கைது செய்தது காவல்துறை. மேலும் கொலை செய்து சங்கிலி முருகன் உடலை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சப்பட்டி - துணைக்கோள் நகரத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத கீழ்நிலை நீர்தேக்க  தொட்டிக்குள் வீசியதாக தெரியவந்தது. கொலைக்கான காரணம் குறித்து பாக்கிய செல்வம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாக்கியசெல்வத்தின் மகளை கிண்டல் செய்தது தொடர்பாக இருவருக்கும் இடையே   முன்விரோதம் இருந்து வந்ததாகவும் இதனால் அடிக்கடி தகராறு நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.  

இதனைத் தொடர்ந்து சங்கிலி முருகனை கொலை செய்யும் நோக்கில் தனது நண்பர்களை அழைத்து திட்டத்தை திட்டியுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த நண்பர்களும் சங்கிலி முருகனை நைசாக பேசி அழைத்து வந்து காரில் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக செம்பட்டி போலீசார் திருமங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். முக்கிய குற்றவாளி பாக்கியசெல்வத்தை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

திண்டுக்கல் எஸ்பி ஜெயக்குமார் திருமங்கலம் டிஎஸ்பி இமயவர்மன் ஆகியோர் தலைமையில் போலீசார் ஆய்வு செய்து உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சங்கிலி முருகன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேரை கைது செய்த போலீசார் மேலும் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக காரில் கடத்தி வந்து கொலை செய்துவிட்டு உடலை ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்தில் கொண்டு வந்து உடலை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.