ஸ்மார்ட் சிட்டியை சுற்றி காட்டுவதாகக் கூறி, நான்கு சிறுமிகளைத் தன்னுடன் அழைத்துச் சென்று, ஓர் அறையில் பூட்டி வைத்து, பின்னர் அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள துபுதானா பகுதியில், நான்கு சிறுமிகள் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பித்து வந்த சிறுமி ஒருவரின் தகவலால் காவல்துறை உடனடியாக அதிரடி சோதனை நடத்தி மற்ற சிறுமிகளை மீட்டதுடன், குற்றத்தில் ஈடுபட்ட ஆறு பேரைக் கைது செய்தது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள துபுதானா பகுதியில் மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் கொடூரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நான்கு சிறுமிகள் ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக, அவர்களில் ஒரு சிறுமி எப்படியோ அங்கிருந்து தப்பித்து, நேரடியாக காவல் நிலையத்திற்குச் சென்று நடந்ததை கூறியுள்ளார். அந்தச் சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு சிக்கியிருந்த மற்ற மூன்று சிறுமிகளையும் மீட்டனர்.
இந்த வழக்கில், துபுதானா போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்து ஆறு பேரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் இருவர் சிறார்களும் அடங்குவர். குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் சம்பந்தப்பட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது காவல்துறை.
நகர காவல் கண்காணிப்பாளர் அளித்த தகவலின் படி, பாதிக்கப்பட்ட சிறுமிகளில் இருவர், குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவரை ஏற்கனவே தெரியும் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சிறுமிகளிடம் 'ஸ்மார்ட் சிட்டியை சுற்றிப் பார்ப்பதாக போகலாம் எனக் கூறி அழைத்துள்ளனர். அதன் பிறகு, அந்த சிறுமிகள் ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, வலுக்கட்டாயமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சிறுமிகளில் ஒருவர் முன்னெச்சரிக்கையாக அங்கிருந்து தப்பித்து, காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சிறுமி அளித்த தகவலின் படி அந்த முகவரிக்கு சென்ற காவல்துறையினர் சோதனை நடத்தினர். அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள மூன்று சிறுமிகளையும் காவல்துறையினர் பத்திரமாக மீட்டதுடன், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, இந்தக் குற்றம் தொடர்பான பல முக்கியத் தடயங்கள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளன. மருத்துவப் பரிசோதனையும் அடுத்தகட்ட விசாரணையும் நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் அனைவருக்கும் காவல்துறை மருத்துவப் பரிசோதனைகு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு சிறார் குற்றவாளிகள் மீது சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவல்துறை இந்தச் சம்பவத்தை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதுடன், இந்தக் குற்றத்தில் வேறு எவருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரித்து வருகிறது. முழுமையான விசாரணை முடிந்த பிறகு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்