தனது தாயின் இரண்டாவது திருமணத்தில் அதிருப்தி அடைந்த 22 வயது மகன், நியூசிலாந்திலிருந்து உத்தரப் பிரதேசத்திற்கு பயணம் செய்து, கடந்த சனிக்கிழமையன்று தனது தாயின் இரண்டாவது கணவரை கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவரான (25 வயது) நவ்ஜோத் சிங், கடந்த சனிக்கிழமை (அக் 10) மாலை ராம்பூரின் மிலக் கானம் பகுதியில் உள்ள அவரது கார் சர்வீஸ் சென்டருக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று (அக் 12) இந்தக் கொலை தொடர்பாக அவரது இரண்டாவது மனைவியின் மகன் அவ்தீப் சிங் மற்றும் அவரது இரண்டாவது மனைவியின் மருமகனும் வாடகைக்கார் ஓட்டுநருமான 23 வயது ராஜன்தீப் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தனது முதல் மனைவி இறந்ததைத் தொடர்ந்து, நவ்ஜோத் விதவையான (49 வயது) கமல் கவுரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவத்தினை அடுத்து கடந்த ஜனவரி மாதம் பிரச்சனை தொடங்கியதாக காவல்துறை தரப்பில் கூறுகின்றனர். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவ்தீப், தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்துள்ளார். இந்நிலையில்தான், கமல் கவுருக்கு இரண்டாவதாக திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு அவரது இரண்டு மகன்களான அவ்தீப் மற்றும் ஜோகன்பிரீத் சிங் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த காலங்களில் கமல் கவுரின் மகன்கள் இருவரும் நவ்ஜோத்தை மிரட்டியதாகவும் அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள தா கலான் கிராமத்தைச் சேர்ந்த நவ்ஜோத், விவசாயி நிஷான் சிங்கின் என்பவற்றின் ஒரே மகன் ஆவார். மேலும், அவரது முதல் மனைவி விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார். அவரது மரணம் தொடர்பாக நவ்ஜோத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு விடுதலையான அவர், பின்னர் குமரியா கலான் சந்திப்பில் ஒரு கார் சர்வீஸ் மையத்தைத் திறந்து நடத்தி வந்துள்ளார்.
காவல்துறையின் கூற்றுப்படி, சனிக்கிழமை மாலை நவ்ஜோத் தனது கார் சேவை மையத்தில் இருந்தபோது, அவர் மீது தாக்குதல் நடத்த வந்தவர்கள் சாம்பல் நிற ஆல்டோ காரில் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். சிசிடிவி காட்சிகளில், அந்த இரு நபர்களும் வாகனத்திலிருந்து இறங்குவது என்பது தெளிவாக பதிவாகியுள்ளது. அவர்களில் ஒருவர் ஓடிச் சென்று நவ்ஜோத்தை சுட்டுவிட்டு, அவரை வெளியே இழுத்துச் சென்றுள்ளார்.
பின்னர், இரண்டாவது நபர் அவரது முதுகில் சுட்டதில், நவ்ஜோத் சரிந்து விழுந்துள்ளார். அதன்பிறகு அவர் மீண்டும் ஒருமுறை சுடப்பட்டுள்ளார். நவ்ஜோத் எப்படியோ எழுந்து தடுமாறியபடி கடைக்குள் சென்றுள்ளார். ஆனால் மீண்டும் சரிந்து விழுந்துள்ளார். இதனையடுத்து அந்த இரு நபர்களும் அவரை பின்தொடர்ந்து சென்று மீண்டும் அவரை சுட்டுவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
நவ்ஜோத் கொலை செய்யப்பட்ட செய்தி வேகமாக பரவியதும், அவரது குடும்ப உறுப்பினர்கள் கூட்டமாக கூடி எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆம்புலன்ஸுக்கு முன்னால் அமர்ந்துள்ளனர். இதனையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
சிறிது நேரத்திலேயே நவ்ஜோத் மருத்துவமனையில் உயிரிழந்த செய்தியும் வந்துள்ளது. ராம்பூரின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனுராக் சிங் கூறுகையில், காவல்துறை விசாரணையின் போது அவ்தீப், தான் செப்டம்பர் 22 அன்று இந்தியா வந்ததாகவும் ஹோட்டல்களிலும், ராஜன்தீப்பின் வீட்டிலும் தங்கியிருந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அப்போதுதான் இருவரும் நவ்ஜோத்தைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை செய்தபோது, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆல்டோ காரை அருகிலுள்ள புதர்களில் மறைத்து வைத்திருந்ததாக இருவரும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, ஒரு குழு அவர்களை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றபோது, அங்கு அந்தச் சாம்பல் நிறக் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
"வழக்கின் விவரங்களைத் தெரிந்துகொள்வதற்காக நாங்கள் அவ்தீப் மற்றும் ராஜன்தீப் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் ஒரு பகுதியாக, அவ்தீப் எப்போது நியூசிலாந்திலிருந்து வந்தார் என்பதையும் கண்டறிய முயற்சித்து வருகிறோம்," என்று கூறிய அனுராக் சிங், இந்த கொலை வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் காவல்துறை விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நவ்ஜோத்தின் தந்தை அளித்த புகாரின் பேரில், அப்பெண்ணின் இரண்டு மகன்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட எட்டு பேர் மீது மிலக் கானம் காவல் நிலையத்தில் போலீசார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் முகங்களை சம்பவத்தின்போது துணியால் மூடியிருந்த போதிலும், காணொளியைப் பார்த்த பிறகு, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அவர்களின் உடல் தோற்றத்தைக் கொண்டு அடையாளம் கண்டுகொண்டதாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் மீட்டெடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்