Gem Granites Owner Veeramani POCSO Case 
க்ரைம்

சிறுமிகளை கொன்று புதைத்தாரா ஜெம் வீரமணி?.. “டிரைவர் பாலா கொடுத்த அந்த வாக்குமூலம்” - பொக்லைனுடன் களமிறங்கிய புலனாய்வு குழு!

வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பல்வேறு இடங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டி சோதனை..

Mahalakshmi Somasundaram

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை புகார்கள் தொடர்பாக ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 7 போக்சோ வழக்குகளும், தற்கொலைக்குத் தூண்டியதாக ஒரு வழக்கும் என மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், வீரமணியின் வீட்டுத் தோட்டத்தில் ஒரு சிறுமியின் உடல் புதைக்கப்பட்டிருக்கலாம் என அவரது ஓட்டுநர் பாலா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நீதிமன்ற அனுமதி பெற்று சிறப்பு புலனாய்வுக் குழுவினர் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி சோதனை நடத்தி வருகின்றனர்.

Royapettah House Excavation Search

டிரைவர் பாலா அளித்த தகவல்!

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணியின் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டின் வளாகத்தில் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டுள்ளதாக வீரமணியின் ஓட்டுநர் பாலா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கும் உடல்நல குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்த நிலையில், அந்தச் சிறுமி உடல் வீட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருப்பதாக பாலா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.இதையடுத்து, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளனர்.

தொடர்ந்து, ஓட்டுநர் பாலாவையும் அழைத்துக்கொண்டு இன்று முற்பகல் 11 மணியளவில் பொக்லைன் இயந்திரத்துடன் வீரமணியின் வீட்டிற்கு வந்தனர். வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பல்வேறு இடங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டி, ஏதேனும் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளனவா என சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

ஓட்டுநர் பாலா அடையாளம் காட்டும் இடங்களிலும் ஆய்வு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, சோதனை நடத்த வந்த சிறப்பு புலனாய்வுக் குழுவினரை வீரமணியின் குடும்பத்தினர் தடுத்து நிறுத்த முயன்றதாகவும், அவரது மனைவி உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், தொடர்ந்து வீட்டின் பல்வேறு பகுதிகளில் தோண்டி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.