சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக இதுவரை 9 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள வீரமணியின் வீட்டில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணைத் தோண்டி போலீசார் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணியின் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டிற்கு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் பொக்லைன் இயந்திரத்துடன் சென்றுள்ளனர்.
அங்கு வீட்டின் வளாகத்தில் ஏதேனும் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளனவா என்ற கோணத்தில், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மண்ணைத் தோண்டி சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சோதனையின்போது வீட்டின் ஒரு பகுதியை பொக்லைன் இயந்திரம் மூலம் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தடுக்க முயன்ற வீரமணியின் மனைவியிடம் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அவரைத் தாக்கிக் கீழே தள்ளியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து காவல்துறை தரப்பு விளக்கம் வெளியாகவில்லை. சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீது சிறப்பு புலனாய்வுக் குழு இதுவரை 9 போக்சோ வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக வீரமணி மட்டுமின்றி, அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக நவம்பர் 13-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், மற்ற வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வீரமணியின் ராயப்பேட்டை வீட்டில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணைத் தோண்டி சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சோதனை நடத்தி வருவது இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சோதனையில் ஏதேனும் முக்கியத் தடயங்கள் கிடைக்கிறதா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.