சென்னை குன்றத்தூர் அருகே உள்ள சிறுகளத்தூர் பகுதியை சேர்ந்த ஜெயந்தி பாண்டி என்பவர், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில், தனது மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து குழந்தைகளைப் பராமரித்து வந்த இவரிடம், கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை எஸ்பிளனேடு பகுதியைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரி பாண்டி என்பவர் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
பாண்டி, தான் தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழவில்லை என்றும், ஜெயந்தியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக புகாரில் தெரிவித்துள்ளார். இந்த திருமணத்திற்குப் பிறகு இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும், வாரத்தில் நான்கு நாட்கள் பாண்டி தனது வீட்டிற்கு வந்து தங்கிச் செல்வார் என்றும் கூறியுள்ளார்.
அப்போது, தான் மின்வாரியத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றுவதால் சட்டப்படி இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும், இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெற்ற பிறகு இருவரும் இணைந்து வாழலாம் என்றும் பாண்டி தன்னை சமாதானப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பாண்டிக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பது ஜெயந்திக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து அவரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாண்டி மீதான நம்பிக்கையில் அவருடன் குடும்பம் நடத்தி வந்த காலகட்டத்தில் ஆறு முறை கர்ப்பமானதாகவும், ஒவ்வொரு முறையும் தற்போது குழந்தை வேண்டாம் எனக் கூறி கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதால் ஆறு முறை கருக்கலைப்பு செய்ததாகவும் குற்றசாட்டியுள்ளார். இதனால் தனது உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், தன்னை நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கடந்த ஏழு ஆண்டுகளாக குன்றத்தூர் மற்றும் திருமுடிவாக்கம் காவல் நிலையங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரி மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி பாண்டி மீது குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகத் தெரிவித்துள்ளார். ஆனால் வழக்குப்பதிவு செய்து இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தற்போது இந்த வழக்கு சங்கர் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, வழக்கைத் திரும்பப் பெறக்கோரி பல்வேறு நபர்கள் மூலம் தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ள ஜெயந்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.