கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பட்டவர்த்தி பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான விஷ்ருத். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில் விஷ்ருத்தின் தந்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கருப்பு பூனை பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். எனவே அனைவரும் குடும்பமாக சென்னைக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது விஷ்ருத்துக்கும் அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த சுருதி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது.
எனவே இருவரும் தங்களது காதலை பற்றி தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில் இருவீட்டாரும் சேர்ந்து விஷ்ருத் மற்றும் சுருதிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். பின்னர் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் சுருதி தொடர்ந்து போனில் யாரிடமோ பேசி வந்ததாகவும், சுருதிக்கு வேறு ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் சுருதிக்கும் விஷ்ருத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த விஷ்ருத் தனது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கரூர் குளித்தலைக்கு குடிபெயர்ந்து உள்ளனர். அங்கு சென்று சில மாதங்கள் நன்றாக நடந்து கொண்ட சுருதி மீண்டும் தனது ஆண் நண்பருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். குழந்தைகளின் எதிர்காலம் நினைத்து விஷ்ருத் அமைதியாக இருந்துள்ளார். ஆனால் சுருதி ஒரு காலக்கட்டத்தில் பிள்ளைகளை கூட கவனிக்காமல் போனில் பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விஷ்ருத் கடந்த (ஜூலை 19) அன்று இரவு சுருதியிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் விஷ்ருத் சுருதியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சுருதி பலத்த காயம் அடைந்ததால் அவரை விஷ்ருத் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சுருதிக்கு அதிக காயங்கள் இருந்ததால் மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவில் சுருதியை அனுமதித்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் விஷ்ருத் இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவி மீது ஆத்திரம் அடங்காத விஷ்ருத் மறுநாள் அதிகாலை மருத்துவமனைக்கு வந்து சுருதியை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பித்து சென்றுள்ளார்.
இதனை பார்த்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உயிருக்கு போராடிய சுருதி சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ருத்தை தேடி வந்துள்ளனர். விஷ்ருத் சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியான நிலையில் போலீசார் சென்னைக்கு செல்ல முடிவு செய்த நிலையில் விஷ்ருத் குளித்தலை காவல் நிலைத்தில் வந்து சரணடைந்துள்ளார். மருத்துவமனையில் ஒரு பெண் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.