கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில், தனது மனைவி திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக சந்தேகப்பட்ட கணவன் அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மனைவியை தாக்கியதை வீடியோவாக பதிவு செய்த கணவர், அவர் உயிருடன் இருந்தபோதே அவரது பெற்றோருக்கு அந்த வீடியோக்களை அனுப்பி, தாக்குதலை பார்க்கும்படி சொன்னதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிலாகி தாலுகாவுக்கு உட்பட்ட கலகலி கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த பெண் பாக்கியஸ்ரீ என்றும், அவரை கொலை செய்ததாக கூறப்படும் அவரது கணவர் பிரவீன் என்றும் போலீசார் அடையாளம் காணப்பட்டுள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையின் படி, பாக்கியஸ்ரீக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக கணவர் பிரவீன் சந்தேகித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தம்பதியினருக்கு இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. குடும்ப பிரச்சினை தொடர்ந்து அதிகரித்த நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு பாக்கியஸ்ரீ தனது கணவரை விட்டு பிரிந்து, மஹாலிங்பூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனிடையே, தங்களுக்குள் ஏற்பட்டதகராறுகளை மறந்து இனிமேல் சரியாக குடும்பம் நடத்தலாம் என்று பிரவீன் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பிய பாக்கியஸ்ரீ மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். ஆனால், அவர்கள் வீட்டிற்கு திரும்பிய சில மணி நேரங்களிலேயே மனைவி பாக்கியஸ்ரீ கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் கூறுகையில், பிரவீன் முதலில் பாக்கியஸ்ரீயை மரக்கட்டையால் தாக்கி கொலை செய்ததாகவும், பின்னர் அவரை தூக்கிலிட்டதாகவும் தெரிகிறது. இதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்த பிரவீன், அந்த வீடியோ காட்சிகளை மனைவியின் பெற்றோருக்கும் மற்றும் பலருக்கும் பகிர்ந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பிலாகி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு பாக்கியஸ்ரீயின் உடலை கைப்பற்றி, சம்பவ இடத்தில் தடயவியல் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பாக்கியஸ்ரீ கண்டெடுக்கப்பட்ட இடத்தின் பின்புற சுவரில், தம்பதியினரின் திருமணத்தின்போது அவர்களது பெயர்கள் எழுதப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகிழ்ச்சியாக தொடங்கிய திருமண வாழ்க்கை, தற்போது கொலை சம்பவத்தில் முடிந்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து கொலை செய்த நபர் பிரவீனை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பாக்கியஸ்ரீயை கொலை செய்ய தூண்டிய காரணம் என்ன? கணவரின் திருமணத்துக்கு புறம்பான உறவு குறித்த சந்தேகம் மட்டுமே காரணமா? அல்லது வேறு ஏதேனும் குடும்பப் பிரச்சினை இருந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலை நடந்த சம்பவம், சம்பவத்திற்கு முன்பு தம்பதியினருக்கு இடையே நடந்த உரையாடல்கள், வீடியோ பதிவு செய்யப்பட்டதற்கான காரணம் மற்றும் அந்த வீடியோ யார் யாருக்கு பகிரப்பட்டது என்பன குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் குடும்பத்தினர் மற்றும் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதேபோல், சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயவியல் ஆதாரங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.