தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், சிவன்னகுடா பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதுடைய நரசிம்ஹ. இவருக்கு திருமணமாகி 58 வயதுடைய வசந்த என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர். சிவன்னகுடா பகுதியில் எந்த தொழிலும் இல்லாமல் வறுமையில் வாடிய நிலையில், நரசிம்ஹ வேலையை தேடி ஹைதராபாத், பி.என் ரெட்டி நகர் பகுதிக்கு குடிபெயர்ந்து உள்ளனர். பின்னர் அங்குள்ள வீடுகளில் வசந்த வீட்டுவேலை செய்தும், நரசிம்ஹ கூலித்தொழில் செய்தும் குடும்பத்தை காப்பாற்றி வந்திருக்கின்றனர். காலையில் வேலைக்குச் செல்லும் வசந்த இரவு தான் வீட்டுக்கு வருவார் என சொல்லப்படுகிறது.
தொடக்கத்தில் இதை கண்டுகொள்ளாத நரசிம்ஹ, நாளாடைவில் மனைவி மீது சந்தேகம் அடைந்து அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். மேலும் ‘எதற்கு தினமும் இரவு லேட்டாக வீட்டிற்கு வருகிறாய்’ என கேட்டு அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிகிறது. நாளுக்கு நாள் நரசிம்ஹவிற்கு மனைவி மீதான சந்தேகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவரது இரண்டு பிள்ளைகளும் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் வழக்கம் போல கடந்த (ஏப் 29) தேதியும் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்த வசந்தவிடம் நரசிம்ஹ வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து இருவரும் மாறி மாறி வாக்குவாதம் செய்து கொண்ட நிலையில் சந்தேகத்தின் உச்சத்திற்கு சென்ற நரசிம்ஹ “என்னை விட்டுட்டு எவன் கூட வாழ போற” என கேட்டு வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு வீட்டிற்கு வெளியே கோடரியை வீசிவிட்டு தப்பி சென்றுள்ளார். மறுநாள் அதிகாலை அந்த வழியாக சென்ற அப்பகுதியை சேர்த்த ஒருவர் வாசலில் ரத்தமாக இருப்பதாய் பார்த்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வசந்த கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் அவரது மகன் அளித்த தகவலின் அடிப்படையில் நரசிம்ஹ மீது வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நரசிம்ஹ அதே பகுதியில் உள்ள புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே அப்பகுதி விரைந்த போலீசார் அங்கு நரசிம்ஹவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மனைவி மீதான சந்தேகத்தில் கணவன் கோடரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.