

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான மாணவர் இரகனபோயினா சந்து, மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்த நிலையில், வேலை வாய்ப்பு தேடும் மன அழுத்தத்தால் சிகாகோ நகரில் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த சந்து, சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள டீபால் பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப் பட்டப் படிப்பை முடித்திருந்தார். படிப்பை முடித்த பிறகு பல மாதங்களாக வேலை தேடிக்கொண்டிருந்தும், வேலை கிடைக்காததால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்துவின் குடும்பத்தினரும், நண்பர்களும் கூறுகையில், தனது குடும்பத்தின் நிதி நிலை குறித்து சந்து மிகுந்த கவலையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, கர்னூலில் பாதுகாவலராக பணிபுரியும் தந்தையின் பொருளாதார சிரமம் மற்றும் குடும்பத்தின் நிதி நிலை, அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.
சிகாகோவில் உள்ள தனது வீட்டிலேயே சந்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பான விசாரணையில் முழு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அவரது நண்பர் ஒருவர், இறப்பிற்கு முன்பு சந்து பலருக்கும் மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகளை அனுப்பி இருந்ததாகவும், அவை தற்போது காவல்துறையிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சந்துவின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர உதவ அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினர் நிதி திரட்டும் முயற்சியைத் தொடங்கியுள்ளனர். சர்வதேச அளவில் உடலை கொண்டு வருவதற்கான செலவு சுமார் 25,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 24 லட்சம்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 76,000 டாலருக்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டுள்ளது. கூடுதலாக, மீதமுள்ள நிதி அவரது குடும்பத்தின் கடன்களை சமாளிக்கவும், சிந்துவின் இறுதி சடங்கு செலவிற்கும் வழங்கப்படவுள்ளது.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதையடுத்து, ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷ் தனது இரங்கலைத் தெரிவித்து, உடலை தாயகத்திற்கு சிரமமின்றி கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சரான ராம் மோகன் நாயுடு அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு பதிலளித்த மோகன் நாயுடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு, செயல்முறையை விரைவு படுத்துவதாகவும், இந்த கடினமான நேரத்தில் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு சமூக வலைத்தள பதிவில், இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமையை தவறாக பயன்படுத்துவதாகவும், மேலும் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை பாதிப்பதாகவும் தெரிவித்தார். அதனையடுத்து அங்கே உள்ள இந்தியர்கள் பலரும் வெளியேறுவதாக தெரிவித்தனர். மேலும் அமெரிக்க அரசும் சொந்த நாடுகளுக்கு திரும்புபவர்களுக்கு விமான செலவு மற்றும் சலுகைகளை அரசு ஏற்கும் எனவும் அறிவித்தது. இதன் அடிப்படையில் பார்க்கையில் இந்தியர்களுக்கு அமெரிக்கா வேலை வாய்ப்பு என்பது சாத்தியமற்றதாக இருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.