காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரம் அடுத்த சோகண்டி பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான மதன். இவர் அதே பகுதியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். மதனுக்கு வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த 36 வயதான லைலா குமாரி என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில் மதன், லைலா குமாரி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன் இருவரும் சட்ட பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
விவகாரத்திற்கு பிறகு மகன் மற்றும் மகள் இருவரும் தந்தை மதனுடன் சோகண்டியில் வசித்து வந்தனர். இதையடுத்து மதன் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சுகன்யா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். சுகன்யா, மதன் மற்றும் மதனின் குழந்தைகள் என அனைவரும் ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வந்த நிலையில் சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலத்தில் வசித்து வந்த முன்னாள் மனைவி லைலா குமாரிக்கும், மதனுக்கும் மீண்டும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.
இதனை அறிந்த சுகன்யா தனது கணவரிடம் இதை பற்றி கேட்க மதனுக்கு சுகன்யாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. லைலா குமரியை விட்டு பிரிந்து வந்து மீண்டும் தான் அவருடன் பழகுவதை ஏற்றுக்கொள்ள முடியாத மதன், லைலா குமாரி தன்னை வசியம் செய்து மயக்கி விட்டதாக நினைத்துக் கொண்டு, அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் .
அதன்படி கடந்த (ஆக 04) ஆம் தேதி சோகண்டி அருகே திருபந்தியூர் வனப்பகுதிக்கு லைலா குமாரியை தனியாக பேச வேண்டும். என கூறி வரவழைத்துள்ளார், வனப்பகுதிக்கு வந்த லைலாகுமாரியை மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டி கொலை செய்து, அங்கே பள்ளம் தோண்டி புதைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில், லைலா குமாரியின் தாய் வசந்தா கடந்த (ஆக 06) ஆம் தேதி மகளை காணவில்லை என சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த சுங்குவார்சத்திரம் போலீசார் லைலாகுமாரியை தேடி வந்துள்ளனர். இதைத் தெரிந்து கொண்ட மதன் லைலா குமரியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டு போலீசில் சரணடைந்தார். தொடர்ந்து மதனிடம் விசாரணை நடத்திய போலீசார் மதன் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், திருபந்தியூர் பகுதி திருவள்ளூர் மாவட்டம் என்பதால் திருவள்ளூர் தாசில்தார் பரமசிவம் மற்றும் மப்பேடு காவல் துறையினர் முன்னிலையில் ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி., கீர்த்திவாசன் தலைமையில் உடலை தோண்டி எடுத்து, திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்களால் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
காவல்துறை விசாரணையில் மதன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வருவதால் பிரேத பரிசோதனை முழுவதுமாக முடிவடைந்த பிறகே கொலைக்கான முழு விவரம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் மனைவியை கணவன் கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.