
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்துள்ள முப்பதுவெட்டி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் 26 வயதான இளங்கோ இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் இளங்கோ தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார், இளங்கோ காஞ்சிபுரத்தில் தங்கி எலக்ட்ரீசியன் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இளங்கோ தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊரான முப்பதுவெட்டி கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது இளங்கோவின் அத்தை மகனான 19 வயதுடைய தனுஷ் குடித்துவிட்டு குடிபோதையில் இளங்கோவின் அக்கா கடைக்கு முன்பு தனது நண்பர்களுடன் சென்று தகராறு செய்து வந்துள்ளார். எனவே இளங்கோ தனுஷை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கும் நோக்கத்துடன் அவரிடம் பேசியுள்ளார். ஆனால் போதையில் இருந்த தனுஷ் இளங்கோவை தகாத வார்த்தைகளால் பேசி திட்டியுள்ளார். இதனால் இளங்கோவும் கோபத்தில் பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி உள்ளது.
பின்னர் இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் விலக்கி சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போதே இளங்கோ தனுஷ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விடலாம் என தெரிவித்துள்ளார். இளங்கோவின் தாய் “உறவினர்களுக்குள் எதற்கு தேவையில்லாத பிரச்சனை வேண்டாம்” என கூறியுள்ளார். எனவே இளங்கோவும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக இருந்த நிலையில் தனுஷ் இளங்கோவன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
எனவே இளங்கோவனை கொலை செய்ய திட்டமிட்ட தனுஷ் நேற்று நள்ளிரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் தனுஷ் வீடு புகுந்து இளங்கோவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த இளங்கோ சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்துள்ளார். இளங்கோ உயிரிழந்ததை உறுதி செய்த தனுஷ் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்று தலைமறைவாக உள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளங்கோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற தனுஷை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.