பெங்களூரில் பிரபல கன்னட நடிகை கிரிஷி தபண்டாவின் வீட்டில் தொழிலதிபர் வைஷாக் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கர்நாடகா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்தபோது நடிகை வீட்டில் இல்லாததாக போலீசார் தெரிவித்துள்ள நிலையில், இந்த மரணத்தின் பின்னணியில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரான வைஷாக், கடந்த ஒரு வாரமாக ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது நண்பர் என சொல்லப்படும் நடிகை கிரிஷி தபண்டாவின் வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் அவர் வீட்டிற்குள் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்த ராஜராஜேஸ்வரி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில், சம்பவம் நடைபெற்ற நேரத்தில் நடிகை கிரிஷி தபண்டா எலஹங்காவில் இருந்ததாகவும், வீட்டில் இல்லாததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து எந்தவித தற்கொலைக் கடிதமும் மீட்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால், இந்த உயிரிழப்பு தற்கொலையா அல்லது கொலை போன்ற வேறு ஏதேனும் மர்ம பின்னணி உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போலீஸ் விசாரணையில், வைஷாக் கடந்த சில மாதங்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும், அவர் தனது மனைவியை விட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக தனிப்பட்ட பிரச்சினைகளால் அவர் இந்த முடிவை எடுத்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில், வைஷாக் ஏற்கனவே ஒரு மிரட்டல் மற்றும் பணம் பறிப்பு வழக்கிலும் தொடர்புடையவராக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வழக்கறிஞர் அரவிந்த் ரெட்டியிடம் ரூ.6 முதல் ரூ.7 கோடி வரை பணம் மற்றும் மன்னிப்புக் கடிதம் கேட்டு கொரியர் மூலம் மிரட்டல் அனுப்பப்பட்ட வழக்கில் வைஷாக்கின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதுதொடர்பாக போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியிருந்த நிலையில், பின்னர் அந்த வழக்கின் விசாரணைக்கு கர்நாடக நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
இதனால், வைஷாக்கின் தற்போதைய மரணத்திற்கும் அந்த வழக்கிற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா அல்லது இது முழுமையாக தனிப்பட்ட காரணங்களால் ஏற்பட்ட சம்பவமா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இதற்கிடையில், வைஷாக்கின் குடும்பத்தினரும் அவரது மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக ராஜராஜேஸ்வரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன், பிரேதப் பரிசோதனை அறிக்கை, தடயவியல் ஆய்வு, செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தொழிலதிபரின் மனைவி அவரது கணவரின் தற்கொலையில் சந்தேகம் இல்லை என்றும் அவரை நடிகையுடன் நெருங்கிய உறவில் இருந்து வந்ததாகவும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். நடிகையின் வீட்டில் தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்த இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வைஷாக் உண்மையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது மரணத்தின் பின்னணியில் வேறு ஏதேனும் சதிச்செயல் உள்ளதா? என்பது போலீசாரின் விரிவான விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே தெளிவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.