கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே ஆறான்விளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய அஜிதா என்ற இளம்பெண், கடந்த வெள்ளிக்கிழமை தக்கலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காகச் சென்றுள்ளார். அப்போது, தான் இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், கர்ப்பத்தை கலைக்க விரும்புவதாகவும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், அஜிதாவை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்து, மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் மருத்துவமனைக்குச் சென்ற போலீசார், இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அஜிதாவின் தாய் இறந்துவிட்ட நிலையில், தந்தை அவரைப் பிரிந்து சென்றதாகவும், இதனால் பாட்டி சுயம்பு தங்கத்தின் அரவணைப்பில் வளர்ந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, வடக்கன்பாகம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய கராத்தே மாஸ்டர் செல்வகுமாரின் இரண்டாவது மகனான, டைல்ஸ் வேலை செய்து வரும் 25 வயதுடைய ஸ்ரீ விக்னேஷை அஜிதா காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு அஜிதாவின் பாட்டி எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அஜிதா, ஸ்ரீ விக்னேஷுடன் சென்று கோவிலில் மாலை மாற்றி, தாலி கட்டி திருமணம் செய்துகொண்டதாகவும், பின்னர் அவரது வீட்டில் வசித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ விக்னேஷின் சகோதரர்கள் இருவருக்கும் திருமணமாகாத நிலையில், மாமனார் செல்வகுமார், மாமியார் ராஜேஸ்வரி, கணவர் மற்றும் அவரது சகோதரர்கள் என அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளனர். கராத்தே மாஸ்டரான செல்வகுமார், மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இரவு காவலாளியாகப் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இரவு பணிக்குச் சென்றுவிட்டு பகலில் வீட்டிற்கு வரும் செல்வகுமார், மனைவி மற்றும் மகன்கள் வேலைக்கு வெளியே சென்ற பின்னர், வீட்டில் தனியாக இருக்கும் அஜிதாவை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், இதன் காரணமாகவே தான் கர்ப்பமானதாகவும் அஜிதா போலீசாரிடம் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து கணவர் ஸ்ரீ விக்னேஷ் மற்றும் மாமியார் ராஜேஸ்வரியிடம் தெரிவித்தபோது, தகவல் வெளியே தெரிந்தால் செல்வகுமார் அவமானத்தில் தற்கொலை செய்துகொள்வார் எனக் கூறி, இதனை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்று இருவரும் தன்னை மிரட்டியதாகவும் அஜிதா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தை வெளியே சொல்லக்கூடாது என தன்னிடம் சத்தியம் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த அஜிதா, கர்ப்பத்தை கலைக்கும் எண்ணத்தில் மருத்துவமனைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அஜிதா அளித்த புகாரின் அடிப்படையில், மணவாளக்குறிச்சி போலீசார் மாமனார் செல்வகுமார், கணவர் ஸ்ரீ விக்னேஷ் மற்றும் மாமியார் ராஜேஸ்வரி ஆகியோர் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள் 64(1), 239, 351(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மூவரையும் கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மகன் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணையே மாமனார் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக எழுந்துள்ள புகார், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்