கன்னியாகுமரி மாவட்டம், அழகியமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் செல்வராஜ். இவர் கூலி தொழில் செய்து வருவதாக சொல்லப்படுகிறது, செல்வராஜ் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் பிலாங்காலை பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது பழகி வந்த நிலையில் செல்வராஜ் தனது நண்பர் சதீஷிற்கு 500-ரூ கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பேசிக்கொள்வதை நிறுத்தியதாக சொல்லப்படுகிறது.
நண்பர்களாக இருவரும் இருந்த போது அழகியமண்டபம் பகுதியில் உள்ள மதுக்கடையில் ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். பின்னர் இருவரும் பேசிக்கொள்வதை நிறுத்திய நிலையிலும் இருவரும் அந்த மது கடையில் மது அருந்திவந்துள்ளனர். மதுக்கடையில் மது அருந்த வரும் ஜெகன் செல்வராஜ் போதையில் தான் கடனாக கொடுத்த 500-ரூ பணத்தை திரும்ப கேட்டு சதீஷை தொடர்ந்து அருவருக்கத்தக்க வார்த்தைகளால் வசைபாடி வந்துள்ளார். வழக்கம் போல ஞாயிற்றுகிழமை இரவு மது அருந்த வந்த ஜெகன் செல்வராஜ் கொடுத்த பணத்தை சதீஷ் இடம் திரும்ப கேட்டு அருவருக்கத்தக்க தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் மற்றும் அவரது நண்பரான மற்றொரு ஆட்டோ டிரைவர் சைஜூ ஆகிய இருவருமாக சேர்ந்து ஜெகன் செல்வராஜை சாலையில் தள்ளி போட்டு சரமாரியாக கட்டையால் தாக்கி சாலையோரம் இழுத்து போட்டு சென்றதோடு மீண்டும் வந்து கால்களால் உதைத்து கடை திண்ணையில் தூக்கி போட்டு ஆட்டோவை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஜெகன் செல்வராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் செல்வராஜ் இதுகுறித்து புகாரளித்த நிலையில் புகாரின் அடிப்படையில் ஆட்டோ டிரைவர்களான சதீஷ் மற்றும் சைஜூ மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த தக்கலை போலீஸார் தலைமறைவாக இருந்த அவர்களை தேடி வந்தனர். இதற்கிடையே ஆட்டோ டிரைவர்கள் கூலி தொழிலாளியை கட்டையால் தாக்கிய சிசிடிவி காட்சி பதிவுகள் வெளியான நிலையில் தக்கலை அருகே ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்த சதீஷ் மற்றும் சைஜூவை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.