yashash and harini  
க்ரைம்

“வீட்டிற்கு வந்த எலக்ட்ரீசியன்” - குழந்தைகளுக்காக வாழ நினைத்த தாய்.. தகாத உறவால் நேர்ந்த மரணம்!

எலக்ட்ரீசியன் வேலை செய்ய சென்றுள்ளார் யஷாஸ் அப்போது இருவருக்கும் பழக்கம்

Mahalakshmi Somasundaram

கர்நாடக மாநிலம் பெங்களூர் கெங்கேரி பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ஹரிணி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அதே கெங்கேரி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் யஷாஸ் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார்.

ஹரிணியின் வீட்டிற்கு ஒரு முறை எலக்ட்ரீசியன் வேலை செய்ய சென்றுள்ளார் யஷாஸ். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி வெளியில் செல்வது அதிக நேரம் போனில் பேசிக் கொள்வது என்று இருந்த நிலையில் இவர்களின் உறவு குறித்து ஹரிணியின் கணவருக்கு தெரியவந்துள்ளது.

இதை அறிந்த கணவர் ஹரிணியை கண்டித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் மற்றும் அவரிடமிருந்த போனை பறித்து கொண்டு ஹரிணியை வீட்டில் அடைத்து வைத்துள்ளார். பின்னர் கணவரிடம் மன்னிப்பு கேட்டு இனி செய்ய மாட்டேன் என வாக்குறுதி அளித்து வேலைக்கு சென்றுள்ளார் ஹரிணி.ஒரு மாதம் ஹரிணியை பார்க்காமலும் பேசாமலும் யஷாஸ் தவித்து கொண்டு இருந்துள்ளார்.

மீண்டும் ஹரிணி வேலைக்கு வருவதை அறிந்த யஷாஸ். வேலை செய்யும் இடத்திற்கு சென்று ஹரிணியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஹரிணி “நமது உறவு எனது கணவருக்கு தெரிந்துவிட்டது எனவே நாம் இந்த உறவை முடித்துக் கொள்வோம் எனது இரண்டு குழந்தைகளுக்காக நான் ஒழுக்கமா இருக்க வேண்டும்” என கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஹரிணியை பிரிய மனம் இல்லாத யஷாஸ் தொடர்ந்து ஹரிணியை தொடர்புகொண்டு தொல்லை செய்துள்ளார். கடைசியாக ஹரிணியிடம் பேசுவோம் முடியாது என்றால் கொன்று விடுவோம் என திட்டம் போட்டு யஷாஸ் ஹரிணியை கடந்த (ஜூன் 06) வெள்ளிக்கிழமை ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்துள்ளார். அங்கு அறை எடுத்து ஹரிணியிடம் “என்னால் உன்னை விட்டு பிரிய முடியவில்லை என்னோடே வந்து வீடு நாம் ஒன்றாக வாழலாம் என” கேட்டுள்ளார்.

அதற்கு ஹரிணி யஷாஸ் உடன் செல்ல மறுப்புதெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யஷாஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஹரிணியை சரமாரியாக குத்தி கொன்றுள்ளார். பின்னர் எதுவும் தெரியாதது போல ஹரிணியின் சடலத்தை ஹோட்டல் அறையில் வைத்து பூட்டி விட்டு சாவியை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அந்த அறைக்கு யாரும் வராததால் ஹோட்டல் நிர்வாகமும் கவனிக்காமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 08) தேதி ஹோட்டலில் இருந்த சுற்றுலா பயணி ஒருவர் பக்கத்து அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக நிர்வாகத்திடம் கூறியுள்ளார். இதனால் அறையை சுத்தம் செய்ய திறந்த நிர்வாகத்தினர் ஹரிணியின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஹரிணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, ஹோட்டலில் தங்குவதற்கு அளித்த ஆதாரம் வைத்து யஷாஸை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்ட நிலையில் யஷாஸ் அளித்த வாக்குமூலத்தின் படி அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.