vellore pocso  
க்ரைம்

“சிறுமியுடன் 3 மாதங்கள் குடும்பம் நடத்திய ஓட்டுநர்” - இரண்டு மனைவிகளை விட்டு மூன்றாவது காதல்.. தனிப்படை அமைத்து போலீசார் அதிரடி!

மகளை நீண்ட நாட்களாக காணாததால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்...

Mahalakshmi Somasundaram

காட்பாடி மாவட்டம், வண்டறந்தாங்கல் சொரக்கால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதுடைய பிரகாஷ். லாரி ஓட்டுநராக பணியாற்றி வரும் இவருக்கும், காட்பாடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கமாக மாறியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக பிரகாஷ் ஆசை வார்த்தை கூறியதாகவ சொல்லப்படுகிறது. இதனை நம்பிய சிறுமியை ஓட்டுநர் தன்னுடன் ஆந்திர மாநிலத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், இருவரும் ஆந்திராவில் சுமார் 3 மாதங்களாக தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

மகளை நீண்ட நாட்களாக காணாததால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை மீட்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சிறுமியும் பிரகாஷும் ஆந்திர மாநிலத்தில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், சிறுமியை பாதுகாப்பாக மீட்டதுடன், பிரகாஷையும் பிடித்து வேலூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அழைத்துச் சென்றது தெரியவந்ததுடன், பிரகாஷுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்றிருப்பதும், அவருக்கு 5 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுமியை அழைத்துச் சென்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரகாஷை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

இதற்கிடையே, மீட்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உளவியல் ஆலோசனைகள் வழங்குவதற்காக அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து வெளிமாநிலத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்ட சம்பவம் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.