கேரள மாநிலம் திருச்சூரில், 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் பிரபல யூடியூபரும் சமூக வலைதள இன்ஃபுளூயன்சருமான டாக்டர் நிஷா ரஃபேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை நிஷா மறுத்துள்ளதாகவும், சொத்து தொடர்பான முன்விரோதம் காரணமாகப் புகார் அளிக்கப்பட்டதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திருச்சூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இதையடுத்து, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுவன் திருச்சூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டான். முதற்கட்ட மருத்துவப் பரிசோதனையில் பாலியல் பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, நிஷா ரஃபேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும், மருத்துவப் பரிசோதனை குறித்த முழுமையான அறிக்கை மற்றும் விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை, குற்றச்சாட்டுகள் தொடர்பான இறுதி முடிவுக்கு வர முடியாது. தன் மீதான குற்றச்சாட்டுகளை நிஷா ரஃபேல் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிறுவனின் குடும்பத்தினருக்கும் அவருக்கும் இடையே அடுக்குமாடிக் குடியிருப்புகள் தொடர்பாக முந்தைய சொத்து தகராறு மற்றும் தனிப்பட்ட முன்விரோதம் இருந்ததாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பின்னணியிலேயே தன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தரப்பில் கூறப்படுகிறது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரின் பின்னணி, சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் சூழல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் பொருளாதாரத் துறை ஆசிரியையாகப் பணியாற்றி வருவதாகவும், சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் மூலம் பிரபலமடைந்துள்ளதாகவும் கூறப்படும் நிஷா ரஃபேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.
ஒருபுறம் சிறுவனின் புகாரின் அடிப்படையில் போலீசார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், மறுபுறம் சொத்து தகராறு காரணமாகப் பொய்யான புகார் அளிக்கப்பட்டதாக நிஷா தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பது போலீஸ் விசாரணை மற்றும் கிடைக்கவுள்ள ஆதாரங்களின் அடிப்படையிலேயே தெரியவரும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்