தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள போடூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் 38 வயதுடைய விஜி. இவர் கால்பந்து விளையாட்டு வீரர், மேலும் கால்பந்து பயிற்சியாளராகவும் வேலை செய்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள மாணவர்களுக்கு தினந்தோறும் மாலை நேரத்தில் கால்பந்து பயிற்சி அளிப்பதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் அவரிடம் பயிற்சி பெறும் மாணவர்களை கால்பந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வைத்திருக்கிறார்.
எனவே மாணவர்களை போட்டிகளில் பங்குபெற அடிக்கடி வெளியூர்களுக்கு அழைத்து சென்று வந்துள்ளார். அப்போது கடந்த (மார்ச் 11) ஆம் தேதி பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கால்பந்து வீரர் விஜி மீது அவரிடம் கால்பந்து பயிற்சி பெற்று வந்த ஒரு சிறுவனின் தந்தை “பயிற்சியாளர் விஜி தனது மகனிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டு தொல்லை கொடுக்கிறார்” என அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த பின்னர் விஜி காணாமல் போன நிலையில் அவரது செல்போன் நம்பரை உறவினர்கள் தொடர்பு கொண்டபோது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்துள்ளது. எனவே உறவினர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் விஜியை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ரங்கசந்திரம் கிராமத்தில் தனியார் நிலத்தில் உள்ள கண்டெய்னர் வீட்டின் பின்புறத்தில் கால்பந்து வீரர் விஜி தனக்கு தானே தூக்கு போட்டு உயிரிழந்து கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தேன்கனிக்கோட்டை போலீசார் தற்கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஜியின் சகோதரர் ரமேஷ் என்பவர் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் விஜியின் உயிரிழப்பு குறித்து புகார் அளித்துள்ள நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கால்பந்து பயிற்சியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.