karur pocso issue  
க்ரைம்

பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை துரத்தி துரத்தி வெட்டிய பாட்டி.. அரிவாளுடன் வீதியில் திரிந்ததால் பரபரப்பு!

மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, மாணிக்கத்தை துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியதாக...

Mahalakshmi Somasundaram

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குண்டாங்கல் பாறை புத்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு என்பவரது மகன் விஜய் என்ற 31 வயதுடைய மாணிக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் வெய்யில் கடைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 4 வயது மகளை, இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று அவரது பட்டி வீட்டில் விடுமாறு கூறியுள்ளனர். எனவே சிறுமியை தனது இருச்சகர வாகனத்தில் அழைத்து சென்ற மாணிக்கம், பாட்டி வீட்டில் விடாமல் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் வீட்டில் யாருமில்லாத நிலையில் அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த சிறுமி அழுதபடியே தனது பாட்டி வீட்டிற்கு சென்று அவரிடம் தனக்கு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுமியை குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, தனது பேத்திக்கு நேர்ந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சிறுமியின் பாட்டி, அரிவாளுடன் மாணிக்கத்தை தேடி சென்றுள்ளார். இன்று மதியம் தேவதானம் பகுதியில் கட்டிடப் பணியில் மாணிக்கம் ஈடுபட்டு வருவதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று பார்த்தபோது அவர் இல்லாததால், தொடர்ந்து தேடியுள்ளார். பின்னர் குளித்தலை பகுதியில் மாணிக்கத்தை கண்டுபிடித்த சிறுமியின் பாட்டி, அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளார்.

அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, மாணிக்கத்தை துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் மாணிக்கத்தின் உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறுமியின் பாட்டியிடம் இருந்து அரிவாளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த மாணிக்கம் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறப்படும் சம்பவத்தையும், அதனைத் தொடர்ந்து சிறுமியின் பாட்டி ஆத்திரத்தில் இளைஞரை அரிவாளால் தாக்கிய சம்பவத்தையும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குளித்தலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்