venkatesan  
க்ரைம்

“நீ வந்து நிலத்தை சொந்தம் கொண்டாடுவியா” - முறையான ஆவணங்களுடன் வாங்கப்பட்ட நிலம்.. விவசாயிக்கு எமனான தீர்ப்பு!

இதனை தொடர்ந்து இருவரும் தங்களிடம் இருந்த ஆவணங்களை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்

Mahalakshmi Somasundaram

திருத்தணி அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 54 வயதான வெங்கடேசன். இவர் அதே பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை வாங்கி தனது பெயரில் சட்டப்படி பதிவு செய்துள்ளார். வெங்கடேசனின் பக்கத்துக்கு நிலத்துக்காரரான அதே பகுதி சேர்ந்த பெருமாள்( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வெங்கடேசனின் நிலத்தில் சில பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார்.

பின்னர் குறிப்பிட்ட இடம் தங்களுக்கு சொந்தம் என்பது போல இருவரும் ஆவணங்களை வைத்திருந்ததை அறிந்த வெங்கடேசன் தன்னிடம் இருந்த ஆவணங்களை சரி பார்த்துள்ளார். அதே சமயம் பெருமாள் வெங்கடேசன் வீட்டிற்கு வந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பிட்ட பகுதி தனக்கே சொந்தம் என  வாக்கு வாதத்தில் ஈடுபட்ட இருவரையும் குடும்பத்தாரும் அக்கம் பக்கத்தினரும் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இருவரும் தங்களிடம் இருந்த ஆவணங்களை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மூன்று மாதங்களாக விசாரணையில் இருந்த வழக்கில் சில வாரத்திற்கு முன்பு தீர்ப்பு வந்த நிலையில் நிலம்  வெங்கடேசனுக்கே சொந்தம் என தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். இதனால் பல காலங்களாக அப்பகுதியில் விவசாயம் செய்து வந்த பெருமாள் மிகுந்த ஆத்திரம் அடைந்துள்ளார்.

எனவே வெங்கடேசனை கொலை செய்ய முடிவு செய்த பெருமாள் தனது நண்பர்கள் சிலரிடம் உதவி கேட்டுள்ளார். பின்னர் நண்பர்களின் உதவியுடன் ஆந்திர மாநிலம் இல்லத்தூர் சாலை வழியாக உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வெங்கடேசனை வழிமறித்த பெருமாள் “காலங்காலமாக நான் பயிர் செய்வேன். நீ வந்த நிலத்தை சொந்தம்  கொண்டாடுவியா” என தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இந்நிலையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெங்கடேசனை பெருமாள் சரமாரியாக கழுத்து, முகம், கை போன்ற பகுதியில் வெட்டியுள்ளார். சம்பவ நடந்த இடம் ஆள் நடமாட்டம் குறைந்த இடம் என்பதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூட யாரும் இல்லாமல் ரத்தம் வெளியேறி வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொலை செய்து விட்டு ஊர் திரும்பிய பெருமாள் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட இடம் ஆந்திர மாநில காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடம் என்பதால் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆந்திர போலீசார் வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து சரணடைந்த பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.