மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான் மற்றும் மேட்டு நீரேத்தான் கிராமங்களுக்கு செல்லும் வயல்வெளி சாலைகளில், அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி வால குரு நாதர் சாமி கோவில், ஆதி அய்யனார் கோவில், அகிலாண்டேஸ்வரி ஓந்தாயி அம்மன் கோவில் மற்றும் ஆங்காள பரமேஸ்வரி கோவில் என அடுத்தடுத்த நான்கு கோவில்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி கோவிலில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
நள்ளிரவில் மர்ம நபர்கள் நான்கு கோவில்களின் பூட்டை உடைத்து தங்க நகைகள் உண்டியல் பணத்தையும் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொள்ளை சம்பவத்தை குறித்து வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெவ்வேறு பகுதியை சேர்ந்த தமிழழகன் ரூபன் மற்றும் சேகர் ஆகிய மூவருக்கும் இடையே ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மூவரும் சேர்ந்து ஒன்றாக சுற்றி திரிந்து நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பணத்திற்கும் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டும் மது அருந்தி ஜாலியாக இருக்க வேண்டும் என எண்ணிய மூவரும் கோவில்களில் கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளனர்.
பெரிய பெரிய கோவில்களில் கொள்ளையடிப்பது என்பது சாத்தியமில்லாதது மற்றும் மிகவும் ஆபத்தானது என எண்ணிய மூவரும் சிறு சிறு கோவில்களில் கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஆடிப்பெருக்கு நாளன்று பக்தர்கள் கோவிலுக்கு அதிகம் வருவார்கள். எனவே காணிக்கை அதிகம் வசூல் ஆகும் என்றும் ஆதி பெருக்கு நாளிற்கு பிறகு கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக கோயில்களை தேர்வு செய்ய கூகுள் மேப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஊருக்கு வெளியில் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள நான்கு கோவில்களை கூகுள் மேப் உதவியுடன் தேர்வு செய்துள்ளனர்.
பின்பு அந்த கோவில்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளதா? என்று நோட்டமிட்டு ஆடிப்பெருக்கு அன்று நள்ளிரவில் அடுத்தடுத்து நான்கு கோவில்களில் கொள்ளையடித்து விட்டு காவல்துறையினர் சாலையில் வைத்துள்ள சிசிடிவிக்களில் சிக்க கூடாது என முன்னெச்சரிக்கையாக வயல்வெளிகளை பயன்படுத்தி தப்பி சென்றது தெரியவந்தது. டெக்னாலஜி பயன்படுத்தி ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கோவில் உண்டியலில் கொள்ளை அடித்த வாலிபர்கள் மூவரையும் தற்போது தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.