மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி தாலுகா திருமால் கிராமத்தைச் சேர்ந்த செல்வம்,சாந்தி தம்பதியின் மகன் 24 வயதான சூர்யா. இவர் கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பானுமதி என்ற பெண்ணுடன் சூர்யாவுக்கு திருமணம் நடைபெற்று தற்போது மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும்,பிறந்து 15 நாட்களான பச்சிளம் ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் பிறந்த ஆண் குழந்தையை தனது மார்பில் போட்டு உறங்கிக் கொண்டிருந்த சூர்யா நண்பர்களிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்ததாக தனது மனைவி பானுமதியிடம் சொல்லிவிட்டு வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். வெளியில் சென்ற சூர்யா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை, இந்நிலையில் காலையில் சூர்யாவின் தாய் தந்தையரிடம் “இரவு வீட்டிலிருந்து சென்ற தனது கணவரை காணவில்லை” என மனைவி பானுமதி கூறியுள்ளார், எனவே அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சூர்யாவை பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சூர்யா கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து சூர்யா காணாமல் போனது குறித்து கூடக்கோவில் காவல் நிலையத்திலும் விருதுநகர் மாவட்டம் ஆவியூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.கடந்த மூன்று நாட்களாக தேடி வந்த நிலையில் திருமால் என்ற பகுதிக்கு அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராம காட்டு பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அப்பகுதியினர் கூடக்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் புகார் அளித்த சூர்யாவின் பெற்றோரை அழைத்து இருசக்கர வாகனத்தை காண்பித்த போது அது சூர்யாவின் இருசக்கர வாகனம் என தெரிய வந்தது.
எனவே அப்பகுதி முழுவதும் போலீசார் மற்றும் உறவினர்கள் சூர்யாவை தேடியபோது இரு சக்கர வாகனம் எரிக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் அழுகிய நிலையில் ஆண் உடல் கிடப்பது கண்டறியப்பட்டது. உடலை பார்த்த சூர்யாவின் பெற்றோர்கள் உறுதி செய்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் ஏ எஸ் பி அன்சுல் நாகர் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து உறவினர்களிடம் விசாரித்த போது காணாமல் போன அன்று அதே ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சூர்யாவை அழைத்துச் சென்றதாகவும் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் குற்றவாளிகளை பிடித்து விசாரித்த பின்பு கொலைக்கான காரணம் தெரிய வரும் எனவும் தெரிவித்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.