அக்ஷய் குமார் மகளுக்கு இணையம் வழி பாலியல் தொந்தரவு அக்ஷய் குமார் மகளுக்கு இணையம் வழி பாலியல் தொந்தரவு
க்ரைம்

மகள் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. அலறிப்போன நடிகர் அக்‌ஷய் குமார் குடும்பம்! என்ன நடந்தது?

அக்‌ஷய் குமார் தனது மகளுக்கு ஏற்பட்ட இந்த கசப்பான அனுபவத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.

மாலை முரசு செய்தி குழு

மகாராஷ்டிர மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார், நடிகர் அக்‌ஷய் குமாரின் 13 வயது மகளுக்கு இணையதள விளையாட்டுத் தளம் வழியாக நேர்ந்த பாலியல் தொல்லை தொடர்பான வழக்கில் முதன்முறையாக ஒருவரைக் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் உள்ள மாநில காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற சைபர் விழிப்புணர்வு மாத தொடக்க விழாவில் பங்கேற்றபோது, அக்‌ஷய் குமார் தனது மகளுக்கு ஏற்பட்ட இந்த கசப்பான அனுபவத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.

தனது மகள் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது அறிமுகமில்லாத ஒரு நபருடன் உரையாட நேரிட்டதாக அக்‌ஷய் குமார் தெரிவித்தார். ஆரம்பத்தில் அந்த நபர் மிகவும் மரியாதையாகவும், விளையாட்டைப் பாராட்டும் வகையிலும் செய்திகளை அனுப்பியுள்ளார். பின்னர் மெதுவாகப் பேச்சுக் கொடுத்து, அவள் எந்த ஊர்? என்று கேட்டுள்ளார். அதற்கு அவள் மும்பை என்று பதில் அளித்ததும், மீண்டும் விளையாட்டைப் பற்றிப் பாராட்டிப் பேசி அவளது நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.

தொடர்ந்து அந்த நபர் அக்‌ஷய் குமாரின் மகளிடம் அவர் ஆணா? அல்லது பெண்ணா? என்று கேட்டுள்ளார். அதற்கு அவள் பெண் என்று பதில் அளித்த அடுத்த நிமிடம், அந்த நபர் அவளிடம் ஆபாசப் புகைப்படம் கேட்டு செய்தி அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி உடனடியாக அந்த விளையாட்டை நிறுத்திவிட்டு, தனது தாயாரிடம் நடந்தவற்றைத் தெரிவித்துள்ளார். குழந்தைகள் இது போன்ற ஆபத்துகளில் சிக்கித் தற்கொலை வரை செல்வதைத் தடுக்க, பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு அவசியம் என்று அக்‌ஷய் குமார் வலியுறுத்தினார்.

இணையதளக் குற்றங்கள் தெருவில் நடக்கும் குற்றங்களை விடப் பெரியதாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட நடிகர் அக்‌ஷய் குமார், பள்ளிகளில் வாரம் ஒருமுறை சைபர் விழிப்புணர்வு வகுப்புகளை நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸிடம் கோரிக்கை வைத்தார். டிஜிட்டல் உலகில் நம் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் அப்போது ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சைபர் விழிப்புணர்வு முகாமில் அக்‌ஷய் குமாரின் இந்தப் பேச்சு வீடியோவாக ஒளிபரப்பப்பட்டது. டிஜிட்டல் உலகில் உள்ள ஆபத்துகள், ஆன்லைன் பண மோசடிகள், சமூக வலைதளப் பாதுகாப்பு, ஃபிஷிங் தாக்குதல்கள் மற்றும் இணையதள மிரட்டல்களில் இருந்து மாணவர்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்த அமர்வில் விரிவாக விளக்கப்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்