மதுரை மாவட்டம், பெருங்குடி அதிசிவன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதுடைய சிவபெருமாள். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில்; கூலித்தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த சிபெருமாள் குடிபோதைக்கு அடிமையாகி நாள்தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து சிவபெருமாள் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த அவரது மனைவி கணவனை பிரிந்து சென்று குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே சிவபெருமாள் தனது 48 வயதுடைய தாய் பொற்கொடியுடன் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தார். மேலும் தாய் வீட்டில் வசிக்கும் நிலையில் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊதாரியாக சுற்றி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் சிவபெருமாள் தொடர்ந்து குடித்துவிட்டு வீட்டில் தனது தாயாருடன் அடிக்கடி தகராறு செய்வது வழக்கமாக நடக்கும் என கூறப்படுகிறது. வழக்கம்போல நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை குடி போதையில் வந்த சிவபெருமாள் தாய் பொற்கொடியிடம் தகராறு ஈடுபட்டு விட்டு வீட்டிற்கு சென்று மதுபோதையில் அயர்ந்து உறங்கியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பொற்கொடி அம்மி கல்லை எடுத்து படுத்திருந்த சிவபெருமாள் தலையில் போட்டு கொலை செய்தார்.
பின்னர் கையில் ரத்தக்கறையுடன்வெளியில் அமர்ந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருங்குடி போலீசார் உடலை கைப்பற்றி தாய் பொற்கொடியை கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரித்த நிலையில் மது போதையில் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் மகனை கொலை செய்ததாக பொற்கொடி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மது போதையில் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த மகனை தாயே அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.