க்ரைம்

மகளுக்கு நேர்ந்த பயங்கரம்! பேச முடியாத பெண்ணின் வயிற்றில் வளர்ந்த கரு - 17 பேரிடம் நடத்திய டிஎன்ஏ சோதனையில் சிக்கிய 'மிருக' தந்தை!

அவர் எதையும் கூற முன்வராததாலும் காவல்துறையினர் விசாரணையில் பெரும் சவால்களைச் சந்தித்தனர்...

மாலை முரசு செய்தி குழு

மும்பையின் கஃப் பரேட் பகுதியில் நெஞ்சை உறையவைக்கும் மிகக் கொடூரமான குற்றச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத 20 வயது இளம்பெண் ஒருவர், தனது சொந்தத் தந்தையாலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கர்ப்பமாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணின் தந்தை உட்பட மொத்தம் 17 பேரிடம் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவில், அந்தப் பெண்ணின் கருவில் வளரும் குழந்தைக்கு தந்தைதான் காரணம் என்பது நூறு சதவீதம் உறுதியானதை அடுத்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.

கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அந்த இளம்பெண் தனது பாட்டியிடம் வயிற்றுக்குள் ஏதோ பூச்சிகள் ஊர்வது போன்ற உணர்வு இருப்பதாகச் சைகை மூலம் தெரிவித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரை காமா மற்றும் ஆல்ப்லெஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்தப் பெண் ஐந்து மாதக் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தது. ஆனால், தொடக்கத்தில் அந்தப் பெண்ணால் பேச முடியாத காரணத்தாலும், அவர் எதையும் கூற முன்வராததாலும் காவல்துறையினர் விசாரணையில் பெரும் சவால்களைச் சந்தித்தனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக காவல்துறையினர் அந்தப் பெண்ணின் தந்தையிடம் கேட்டபோது, அவர் பாலியல் வன்கொடுமை புகாரைத் திட்டவட்டமாக மறுத்ததோடு, புகார் அளிக்கவோ அல்லது வழக்குத் தொடரவோ முன்வரவில்லை. மகளுக்கு எப்படி கர்ப்பம் உண்டானது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறினார். எனினும், முறையான ஆலோசனைகளுக்குப் பிறகு அந்தப் பெண் புகார் அளிக்க ஒப்புக்கொண்டார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரைப் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து உண்மை குற்றவாளியைக் கண்டறிய தந்தை உட்பட 17 சந்தேக நபர்களிடமிருந்து இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டன.

கடந்த ஜனவரி 27 ஆம் தேதி வெளியான டிஎன்ஏ சோதனையின் முடிவுகள் காவல்துறையினரையே அதிர வைத்தன. மற்ற 16 பேரின் மாதிரிகள் பொருந்தாத நிலையில், அந்தப் பெண்ணின் தந்தையின் டிஎன்ஏ மட்டுமே கருவில் இருந்த குழந்தையுடன் ஒத்துப் போனது. இதன் மூலம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த தனது மகளையே அந்த நபர் தொடர்ந்து சித்ரவதை செய்தது அம்பலமானது. கடந்த ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இந்த வன்கொடுமை நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. தற்போது தந்தை உட்பட மூன்று பேர் இந்தக் கொடூரக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் இன்னும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.